ஆண்டிற்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த உத்தரவு

2022ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிற்கும் 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த உத்தரவு பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Tamil Nadu government
Tamil Nadu government

தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நான்கு முறை குறிப்பாக, குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மக்கள் பங்கேற்பதையும் முடிவெடுப்பதை அதிகப்படுத்தும் வகையில் இனி ஒவ்வொரு ஆண்டும் 6 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்படும் எனவும், உலக தண்ணீர் தினமான மார்ச் 22 மற்றும் உள்ளாட்சி தினமான நவம்பர் 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

அதனை செயல்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.. அதன்படி ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, மார்ச் 22 உலக தண்ணீர் தினம், நவம்பர் 1 உள்ளாட்சி தினம் ஆகிய நாட்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் தண்ணீர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தண்ணீரை சிக்கனமாக கையாண்டு "உயிர்போல் காப்போம்" என்ற உறுதிமொழி ஏற்க வலியுறுத்தப்பட்டுள்ளது.. அதேபோல் உள்ளாட்சிகள் தினத்தன்று அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் தமிழ்நாடு அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் நாளன்று மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் பற்றாளர்கள் ( Nodal officer ) மூலம் கண்காணிக்க கேட்டுக்கொள்வதோடு, கிராம சபை கூட்டம் நடைபெற்றது தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநருக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவுன் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com