ஆசிரியர் தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. அதன்படி, 2022ம் ஆண்டுக்கான அறிவிப்பை சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தத் தேர்வுக்கு கடந்த மாதம் 14ம் தேதி முதல் கடந்த 13ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.
இந்தத் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1, தாள்-2 என்ற அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.
அதன்படி முதல் தாளில் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் 150 வினாக்கள் கேட்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதில் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தலில் 30 வினாக்களும், மொழிப்பாடத்தில் 30 வினாக்களும், ஆங்கிலத்தில் 30 வினாக்களும், கணிதத்தில் 30 வினாக்களும், சுற்றுச்சூழல் கல்வியில் 30 வினாக்கள் என மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும் என்றும் தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தாளில் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 150 வினாக்கள் கேட்கப்படும். இதில் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தலில் 30 வினாக்களும், மொழிப்பாடத்தில் 30 வினாக்களும், ஆங்கிலத்தில் 30 வினாக்களும், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 60 வினாக்கள் என 150 வினாக்கள் கேட்கப்படும் என்றும் இந்த தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. தேர்வு எழுதக்கூடிய தேர்வர்கள் அந்த இணையதளத்தில் சென்று புதிய பாடத்திட்டத்தின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.