
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை விளக்கி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் தமிழ்நாடு பொதுச்செயலாளர் துரை பாண்டியன், மார்ச் 28 மற்றும் 29 அன்று நாடுமுழுவதும் ஒன்றிய அரசுக்கு எதிராக பொது வேலைநிறுத்தம் நடைபெறஉள்ளது. பொது வேலை நிறுத்தத்தில் இந்தியா முழுவத்திலுமிருந்து விவசாய தொழிலாளர்கள், ஒன்றிய அரசு ஊழியர்கள் என 25 கோடிக்கும் மேலானோர் கலந்துகொள்ள உள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை 1.30 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்கள் சேர்த்து 30 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இலங்கை போல இந்தியாவும் விலைவாசி உயர்வை சந்திக்க போகிறது என்றார். இலங்கையிலும் புதிய பொருளாதார கொள்கை மற்றும் தனியார்மயமாக்கல் நடைமுறை படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது எனவும்
இலங்கையில் உள்ளவர்கள் உணவுக்காக இந்தியா நோக்கி வருகின்றனர்.தவறான பொருளாதார கொள்கையே இதற்கு காரணம் என்றார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்தவும் கோரிக்கை வைத்து பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் 8.75 லட்சம் ஒன்றிய அரசு காலி பணியிடங்கள் உள்ளது. ஒவ்வொரு ஒன்றிய அரசு ஊழியரும் மூன்று பேரின் வேலைகளை பார்க்க நிர்பந்திக்கப்படுகின்றனர். மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் தபால்துறை, கல்பாக்கம் அனல் மின் நிலையம், வங்கிகள்போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் இயங்காது எனவும் தெரிவித்தார். தமிழகத்தை பொருத்தவரை திமுக மற்றும் இடதுசாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.