சென்னை புரசைவாக்கம் வைக்கோகாரன் தெருவில் அசோக் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டு மகன்களும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். திருமணமான இவரது மகள் தனது கணவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மகள் ஆர்த்தி கடந்த இரு தினங்களாக தனது அப்பாவான அசோக் பாபுவுக்கு போன் செய்து உள்ளார். ஆனால், போன் எடுக்காததால் இன்று போலீஸாருடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழிட்ட நிலையில் அசோக் பாபு நிர்வாணமாக இறந்து கிடந்துள்ளார்.
அருகில் அசோக் பாபுவின் மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி பத்மினி என்பவர் இறந்துபோன அசோக் பாபுவையே பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த வேப்பேரி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், மனநலம் பாதிக்கப்பட்டு இரு தினங்களாக சடலத்துடன் வாழ்ந்து வந்த அசோக் பாபுவின் மனைவி பத்மினியை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மரணம் தொடர்பாக வேப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.