தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி உடனுறை ஐயாரப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை விழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் விழாவினை முன்னிட்டு காலை மாலை என இருவேளைகளிலும் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஏழூர் பல்லக்குகளுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக திருவையாறு ஐயாறப்பர், தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர், திருப்பத்துரத்தி புஷ்பவனேஷ்வரர், திருவேதக்குடி வேதபுரீஸ்வரர் உள்ளிட்ட ஏழு ஊர்களில் இருந்து சுவாமி புறப்பாடாகி, திருவையாறு தேரடியில் எழுந்தருளினர்.
அங்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் போதுமான பாதுகாப்புகள் இல்லாததால் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி தவித்தனர். மேலும் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.