திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த விக்னேஷ் கிருஷ்ணா என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டம், ஒழுங்குமுறை விதிகள், உரிம நிபந்தனைகள்படி, அதிகாலை 1 மணி காலை 9 மணி வரை எந்த காட்சியும் திரையிடக் கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதை மீறி திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளை காலை 9 மணிக்கு முன்பாக திரையிடுவதாகவும், அந்த காட்சிகளுக்கு அதிக கட்டணம் வசூலித்து, பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிப்பதுடன் வரி ஏய்ப்பும் செய்வதால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுசம்பந்தமாக தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், இந்த சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், சட்டம், விதி மற்றும் உரிம நிபந்தனைகளை மீறி படங்கள் திரையிடப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் சட்டப்படி நான்கு காட்சிகள் தான் திரையிடப்பட வேண்டிய நிலையில், விதிகளை மீறி எட்டு காட்சிகள் திரையிடப்படுகிறது என வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள், சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டதுடன், விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து வழக்கு குறித்து தமிழக அரசும், காவல்துறையும் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.