சென்னை வருகிறார் பிரதமர் மோடி : பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தமிழக பாஜக ஏற்பாடு

தமிழகத்தில் 31 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, இன்று சென்னை வருகிறார். இதையொட்டி, சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வருகிறார் பிரதமர் மோடி : பிரம்மாண்ட வரவேற்பு  அளிக்க தமிழக பாஜக ஏற்பாடு

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் ஒரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார்.

இதற்காக, ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர், பின்னர் சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் 31 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் இரவு 7.05 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்படும் பிரதமர், 7.35 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றடைகிறார்.

அங்கிருந்து 7.40 மணிக்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்து 50 ஆயிரம் பாஜக தொண்டர்கள் சென்னைக்கு படையெடுத்துள்ளனர். சென்னையில் 25 இடங்களில் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தமிழக பாஜக ஏற்பாடு செய்து வருகிறது.

பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் டிரோன்கள் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனிடையே, சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி சென்னைக்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்புவது வரை எந்த மாதிரியான பாதுகாப்பு அளிப்பது குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com