திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனி அடிவாரம் பகுதியில் உள்ள கிரிவீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் ஏராளமான உணவகங்கள் மற்றும் சிப்ஸ் கடைகள் அதிகளவில் உள்ளன
இந்த நிலையில் பழனி மின்இழுவைரயில் நிலையம் அருகே செயல்படும் தனியார் சிப்ஸ் கடையில் இருந்து அதிகளவிலான புகை வெளியேறுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பக்தர்கள் உண்ணும் உணவுகளில் சாம்பல் மற்றும் தூசிகள் விழுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சுவாசிக்க முடியாத அளவுக்கு தூசியும் பறந்ததால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து சிப்ஸ் கடை உரிமையாளரிடம் அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் அனைவரும் சென்று கேட்டபோது, கடை உரிமையாளர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அப்பகுதி பொதுமக்கள், சிப்ஸ் கடையில் முந்திரி ஓடுகளால் அடுப்பு எரிக்கப்படுவதால் அதிகளவு கரும்புகை வெளியேறுகிறது. இதன் காரணமாக சாம்பல் மற்றும் கரித்தூள் ஆகியவை காற்றில் பறந்து பக்தர்கள் சாப்பிடும் உணவு மற்றும் வியாபாரப் பொருட்களில் விழுந்து பொருட்கள் பாலாகிறது.
இதுகுறித்து கடை உரிமையாளரிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று அதிகளவில் புகை எழும்பி தூசு கிளம்பியதால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கேட்டபோது கடை உரிமையாளர் அநாகரிகமாக பேசி மிரட்டுவதாகவும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கரும்புகை வெளியேற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.