ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையை ஒரு மாதம் நடத்த வேண்டும்-டிஜிபி உத்தரவு

ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையை ஒரு மாதம் நடத்த வேண்டும்-டிஜிபி உத்தரவு

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 ஒரு மாதம் நடத்த வேண்டும் என அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Published on

கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் இந்தாண்டு ஜனவரி மாதம் வரை நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையில் பல கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0 இந்த மாதம் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை நடத்தப்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போதை பொருட்களை ஒழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனையில் ஈடுபடுவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்ச்சியாக இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கஞ்சா, குட்கா பதுக்கல் மற்றும் விற்பனை சங்கிலியை உடைக்க மொத்த கொள்முதல் மற்றும் விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். கஞ்சா, குட்கா பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மன ஆலோசகரிடம் அனுப்பி பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும் எனவும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களை கொண்டு காவல் ஆய்வாளர் வாட்ஸ் ஆப் குழு ஒன்றை உருவாக்கி, ரகசிய தகவல் சேகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆந்திரா மாநில கஞ்சா பயிரை ஒழிக்க ஆந்திர போலீசாருடன் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் இதை மாநில போதை தடுப்புப்பிரிவு முன்னின்று செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் கஞ்சா கடத்தி செல்பவரை கண்காணித்து கைது நடவடிக்கைகளில் ரயில்வே காவல்துறையினர் ஈடுபடவேண்டும் எனவும் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்களுக்கு தஞ்சாவூர் குற்றவாளிகளை கண்காணிக்கும் பொறுப்பை அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்சல் மூலமாக போதை மாத்திரை மற்றும் போதை மருந்துகள் விற்பனை செய்பவர்களை கண்காணிக்க தனிப்படை அமைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் இந்த பணியினை கூடுதல் காவல் ஆணையர் சட்டம் ஒழுங்கு தினமும் கண்காணித்து மாநில கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் டிஜிபி சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

logo
vnews27
www.vnews27.com