நீட் விலக்கு மசோதா விவகாரம்... குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு!!

நீட் விலக்கு மசோதா விவகாரம்... குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு!!

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கக் கோரி மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத் தருவதாக திமுக தேர்தல் பரப்புரை செய்து வாக்குகளை ஈர்த்தது. பின்னர் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது பற்றி ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை நியமித்த அரசு, அந்தக் குழுவின் அறிக்கை அடிப்படையில் மாநில சட்டப்பேரவையில் சட்டமியற்றி அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு 2021ம் ஆண்டு செப்டம்பரில் அனுப்பி வைத்தது.

ஆனால், அந்த மசோதாவை பரிசீலனை செய்வதாகக் கூறி வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, 142 நாட்களுக்குப் பிறகு மசோதாவில் சில ஆட்சேபங்களைக் குறிப்பிட்டு சபாநாயகருக்கே திருப்பி அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து மாநில சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டு மீண்டும் நீட் விலக்கு மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. ஆளுநர் திருப்பி அனுப்பிய செயலுக்கும் சட்டப்பேரவையில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, அந்த மசோதா மீண்டும் கடந்த மார்ச் 13ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பிறகு அதற்கு ஒப்புதல் வழங்கி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்குமாறும் கூறி மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதாவை அனுப்பி வைக்கும்போது, சட்டப்பேரவையில் மாநில பட்டியலின் கீழ் உள்ள விவகாரங்கள் தொடர்பான மசோதாக்கள் சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டால் அதை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.

முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை அவ்வப்போது நேரில் சென்றும் ஆளுநரிடம் வலியுறுத்தினர். அண்மையில் ஆளுநரின் தேநீர் விருந்தையும், சிலை திறப்பு நிகழ்ச்சியும் தமிழக அரசு புறக்கணித்திருந்த நிலையில், அடுத்தகட்ட நகர்வாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் சட்ட விலக்கு மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் மாளிகை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இது தொடர்பாக ஆளுநர் செயலகம் மூலம், தமிழ்நாடு முதல்வருக்கு முறைப்படி ஓரிரு தினங்களில் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com