விசாரணைக் கைதி மர்ம மரணம் விவகாரம்... காவல்துறை விளக்கம்!!

காவல் நிலையத்தில் இருந்த விசாரணை கைதி சந்தேக மரணமடைந்தது தொடர்பாக சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
விசாரணைக் கைதி மர்ம மரணம் விவகாரம்... காவல்துறை விளக்கம்!!

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் சந்தேக மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சென்னை காவல்துறை விளக்கம் ஒன்றை செய்தி குறிப்பு மூலமாக தெரிவித்துள்ளது. அந்த விளக்கத்தில் சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் குழுவினர் கெல்லீஸ் சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, நள்ளிரவு அவ்வழியாக வந்த ஆட்டோவினை நிறுத்தி விசாரணை செய்ததாகவும், ஆட்டோவில் உடலில் சிராய்ப்பு காயங்களுடன் இருந்த 2 நபர்களை விசாரணை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் அவர்களையும், அவர்கள் வந்த ஆட்டோவையும் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தபோது ஆட்டோவில் கஞ்சா, மதுபாட்டில்கள் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அவர்களை விசாரணைக்கு அழைத்தபோது அவ்விருவரும் காவல் குழுவினரை தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கி ஆட்டோவில் வைத்திருந்த கத்தியால் காவல் குழுவினரை தாக்க முற்பட்டதாகவும், உடனே சுதாரித்துக் கொண்ட காவல் குழுவினர் அவர்களிடமிருந்து கத்தியை பறித்து, இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் வைத்திருந்த கஞ்சா, மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவ்விருவரையும் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல் குழுவினர் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் சுரேஷ், விக்னேஷ் என்பதும், சுரேஷ் (எ) ஜொல்லு சுரேஷ் மீது 2 கொலை வழக்குகள், 2 கூட்டு கொள்ளை வழக்குகள் உட்பட 6 வழக்குகளும், விக்னேஷ் (எ) விக்னா மீது 2 கொள்ளை வழக்குகள் உட்பட 4 குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரியவந்ததாகவும் சென்னை காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணை முடிந்து இருவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் விக்னேஷ் (எ) விக்னாவுக்கு வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டதால், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விக்னேஷை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது,நாடி துடிப்பு குறைவாக உள்ளதால் அரசு

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்ததால், விக்னேஷ் (எ) விக்னாவை உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் மூலம் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உயரதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை செய்து பின்னர் இச்சம்பவம் குறித்து தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், தற்போது பெருநகர குற்றவியல் நடுவர் மூலம் இச்சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவமணையில் விசாரணை நடைபெறுவதாகவும் சென்னை காவல்துறை அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com