11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் துவங்கியது மதுரை - தேனி ரயில் போக்குவரத்து.

11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் துவங்கியது மதுரை - தேனி ரயில் போக்குவரத்து.

கம்பம், போடிமெட்டு, இடுக்கி பகுதிகளில் விளையக்கூடிய ஏலக்காய், மிளகு, பஞ்சு, மற்றும் மூலிகை பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் 1928ம் ஆண்டு போடி - மதுரை இடையே குறுகிய பாதையில் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது.

காலப்போக்கில் பயணிகள் ரயிலாக மாற்றப்பட்ட நிலையில் 1954ம் ஆண்டு குறுகிய பாதை - மீட்டர் கேஜ் ரயில் பாதையாக மாற்றப்பட்டது.

பின்னர், மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றம் செய்வதற்காக 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மதுரை - போடி இடையே 98 கி.மீ. தூரத்திற்கு அகல பாதையாக மாற்றம் செய்யும் பணிகள் போதிய நிதி ஒதுக்காத காரணத்தால் சுணக்கம் ஏற்பட்டது. மக்களின் தொடர் கோரிக்கைகள் காரணமாக ரூ.506 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

அதன் மூலம், முதற்கட்டமாக மதுரை - தேனி இடையே 75 கிமீ தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. தேனி - போடி இடையேயான பணிகள் நடைபெற்று வருகின்றன.

11 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் நிறைவுற்று 2022 மே 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்கி வைத்தார்.அதன்படி, மதுரை - தேனி முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கும், தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கும் என தினமும் இரு வேளை இயக்கப்படவுள்ளது.

வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய நிலையங்களில் ரயில் நின்று செல்லும்.மதுரையில் இருந்து தேனிக்கு 45 ரூபாயும், ஆண்டிப்பட்டிக்கு 35 ரூபாயும், பிற நிலையங்களுக்கு 30 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இந்த ரயிலில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளும், இரண்டு இரண்டாம் வகுப்பு பொது மற்றும் சரக்கு பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

மதுரை வரை இயங்கும் சேவையை சென்னை வரைக்கும் நீட்டிப்பு செய்ய வேண்டும்; தினமும் இரண்டு முறை மட்டும் இயக்கப்படும் ரயிலை 4 முறை இயக்க வேண்டும்; விரைவு ரயிலை பயணிகள் ரயிலாக மாற்றம் செய்ய வேண்டும்; மூன்று நிலையங்கள் தவிர்த்து கூடுதலாக நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி, கருமாத்தூர் நிலையங்களிலும் ரயில் நிற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com