காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், தென்கலை பிரிவினர் மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்து கோவில் உதவி ஆணையர், கடந்த 14 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து வடகலை பிரிவைச் சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வடகலை பிரிவினரையும் வேத பாராயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுத்தது சட்டவிரோதமானது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவில் உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்த மே 14 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை இன்றைய தேதிக்கு தள்ளி வைத்திருந்தது.
அதன்படி இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வடகலை பிரிவினர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கோவில் விழாக்கள் மீது அறநிலையத் துறைக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது எனவும், இரு தரப்பினரையும் பாராயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் வாதிட்டனர்.
மேலும், ஒரே கடவுளை வழிபடும் இரு பிரிவினருக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை எனவும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 10 மாதங்கள் வடகலை பிரிவினர் வேத பாராயணம் பாட அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். வடகலை பிரிவினரின் உரிமைகள் மீது எப்போதும் தலையீடு உள்ளது எனவும், அவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என வடகலை பிரிவினர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
11 நொடிகள் மட்டுமே வடகலை பிரிவினரின் மந்திரங்களை கூறுவதால் ஸ்வாமி ஊர்வலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனவும் வடகலை தரப்பில் வாதிடப்பட்டது. தென்கலை பிரிவினர் தரப்பில், முந்தைய ஆண்டுகளில் இரு போல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும், இது புதிதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது.
கோவில் உதவி ஆணையர் உத்தரவை நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியாது எனவும், வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் ஏதேனும் குறை இருந்தால் அறநிலையத் துறை இணை ஆணையர், ஆணையரிடம் தான் முறையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. வடகலை பிரிவினருடன் கலந்து பேசிய பிறகு தான் உதவி ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தென்கலை பிரிவு தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசுத்தரப்பில், விழாவை முறைப்படுத்தவும், ஊர்வலங்களில் தடை செய்யப்பட்ட பாடல்களை பாடியதுடன், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த விடாமல் தடுத்ததாலும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை பிரிவினரும், சாதாரண பக்தர்களும் அமர அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
இதனை கோவில் உதவி ஆணையர் முறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். தென்கலை பிரிவினர் முதலில் ஸ்ரீ சைல தயாபத்ரம் வாசிக்கவும், அதன்பின்னர் வடகலை பிரிவினர் ஸ்ரீ ராமானுஜ தயாபத்ரம் வாசிக்கவும், அதன் பின்னர் தென்கலை, வடகலை, பிற பக்தர்கள் இணைந்து நாலாயிர திவ்விய பிரபந்தம் பாட அனுமதிக்க வேண்டும் எனவும், அதன்பின்னர் தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகள் வாலி திருநாமமும், வடகலை பிரிவினர் தேசிகம் வாலி திருநாமமும் பாட அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக விரிவான ஏற்பாடுகளை உதவி ஆணையர் மேற்கொள்ளவும், இந்த நடைமுறைகளை வீடியோ பதிவு எடுக்கவும் உத்தரவிட்ட நீதிபதி, அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.