போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு ஃபைன் கட்டாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு… காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிர்ச்சி தகவல்!!
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு அபராதத் தொகை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். வாகன விதிமீறல் தொடர்பான அபராத தொகை கட்டுவதற்காக சென்னையில் 10 இடங்களில் போக்குவரத்து காவல் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேப்பேரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எஸ்.எம்.எஸ் மூலம் அபராத ரசீது லிங்குடன் அனுப்பப்படும் நிலையில், அந்த லிங்கை கிளிக் செய்து அபராதத் தொகை செலுத்துவதில் சிக்கல் ஏற்படுவது தெரிய வருகிறது.
தற்போது போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகையை செலுத்தாமல் இருப்பவர்களை அழைக்க போக்குவரத்து அழைப்பு மையங்கள் துவக்கியுள்ளோம். சென்னையில் 10 இடங்களில் போக்குவரத்து அழைப்பு மையங்கள் இன்று துவங்கப்பட்டுள்ளது. பழைய அபராதத் தொகையே நடைமுறையில் உள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்தபின் வருங்காலங்களில் புதிய அபராதத் தொகை நடைமுறைக்கு வரும். சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்களால் பொதுமக்களுக்கு பாதிப்போ, போக்குவரத்து நெரிசலோ ஏற்படாத வண்ணம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
5 லட்சத்துக்கும் மேலான போக்குவரத்து விதிமீறல் அபராத செலான்கள் நிலுவையில் உள்ளது. இன்று துவங்கப்பட்டுள்ள அழைப்பு மையங்கள் மூலம் அபராதத் தொகை செலுத்தாதவர்களை அழைத்து நினைவூட்டுவோம். அபராதம் செலுத்த அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதங்களை பொதுமக்கள் தபால் நிலையம், கிரெடிட் கார்டு உள்ளிட்ட 6 வழிகளில் செலுத்தலாம் என்று தெரிவித்தார்.