கூட்டுறவு சங்க விற்பனை பிரதிநிதி தேர்வு… 2 மாதங்களில் முடிவை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு!!

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்க விற்பனை பிரதிநிதிகளுக்கு 2020ல் நடத்திய தேர்வு முடிவுகளை இரண்டு மாதங்களில் வெளியிட கூட்டுறவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க கடைகளில் 236 விற்பனை பிரதிநிதிகள் பணிக்கு மாவட்ட கூட்டுறவு சங்க தேர்வு குழு விண்ணப்பங்களை வரவேற்றது. இப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு நேர்முக தேர்வு நடத்திய நிலையில், அதன் முடிவுகள் வெளியிடப்படாததால், திவ்யா, தமிழ்மணி உள்ளிட்ட எட்டு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, தேர்வை ரத்து செய்து விட்டதாக அரசுத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று வழக்கு செல்லத்தக்கதல்ல என கூறி தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எட்டு பேரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேர்வு நடைமுறைகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், முடிவுகள் வெளியிடப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அரசுத்தரப்பில், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்வு நடைமுறைகள் முழுமையாக முடிந்த நிலையில், தேர்வில் பங்கேற்றவர்களை வெளியேற்றும் வகையில் தேர்வை ரத்து செய்தது தவறு எனவும், புதிய தேர்வு நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாத வகையில் சிலர் வயது வரம்பை கடந்திருக்கலாம் எனச் சுட்டிக்காட்டினர்.

காலியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அவற்றுக்கு தனியாக தேர்வு அறிவிப்பு வெளியிட எந்த தடையும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், 2020ம் ஆண்டு நடத்திய தேர்வு முடிவுகளை இரண்டு மாதங்களில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com