வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மூளைச்சாவு அடைந்த காரணத்தினால் அவருடைய உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு இதயம் தேவைப்பட்ட காரணத்தினால் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வரப்பட்டது.
இதற்காக சரியாக மாலை 3 மணி அளவில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து TN87A5569 என்கின்ற ஆம்புலன்ஸ் கிளம்பி சென்னையை 4.35 மணியளவில் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையை சென்றடைந்தது.
குறிப்பாக ஆம்புலன்ஸ் செல்வதற்காக சென்னை எல்லைக்குட்பட்ட வானகரம் பகுதி முதல் அப்போலோ மருத்துவமனை அமைந்துள்ள கிரீம்ஸ் ரோடு பகுதி வரை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் ஆம்புலன்ஸ் செல்வதற்காக சில ஏற்பாடுகள் செய்தனர்.
சென்னை வானகரம், கோயம்பேடு, அரும்பாக்கம், அண்ணா ஆர்ச், அமைந்தகரை, ஈகா திரையரங்கம் சாலை, சேத்பட், கல்லூரி சாலை, உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் இதயம் கொண்டு வரக்கூடிய ஆம்புலன்ஸ் செல்வதற்காக போக்குவரத்து ஏற்பாடுகளை செய்தனர்.
இதனிடையே அண்ணா ஆர்ச் இருவழி சாலையினுள் இதயம் கொண்டுவரக்கூடிய ஆம்புலன்ஸ் செல்லக்கூடிய சாலையில் எதிர் திசையில் வரக்கூடிய வாகனங்கள் நுழையாமல் இருப்பதற்காக வாகனங்கள் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
சென்னையின் முக்கியமான சாலைகளில் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட கூடிய சாலைகளில் ஆய்வாளர் மர்றும் உதவி ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் ஆம்புலன்ஸ் செல்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சரியாக 1:30 மணி நேரத்தில் இதயம் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.