தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மே18 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வரை 59 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை, எளிய குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை.
அதன்படி மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் ஏப்.20 முதல் தொடங்கி மே 18ம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக வருமானமுள்ள பெற்றோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் அதிகபட்சமாக விண்ணப்பிக்கலாமெனவும், நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மே 23ம் தேதி அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென மெட்ரிகுலேசன் இயக்குனரகம் அறிவுறித்தியிருந்தது.
மே 18ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வரை 59,100 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், இந்தாண்டு 1.5 லட்சம் மாணவர்களுக்கு மேல் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.