
2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சித்துறைக்கு ஒதுக்கிய நிதிநிலை குறித்து சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ்,
வழங்கப்படும் நிதி குறித்த விபரங்களை பயனாளிகள் அறிய கையேடு மற்றும் 15 வது நிதிக்குழு ஆணைய மானியம் பயன்படுத்தற்கான வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய கையேடு ஆகியவற்றை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டார். இதில், ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் பி.அமுதா ஐ.ஏ.எஸ், இயக்குநர் பிரவீன் நாயர், இணை செயலாளர் சந்திரசேகர் சாகமூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், ஏப்ரல் 6 ம்தேதி நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை எந்த அளவுக்கு சென்று இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய இருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்தபோது, இக்கட்டான சூழல் நிலவியது. குறிப்பாக பொருளாதாரம் சரிவு, அரசு மீது ரூ.6 லட்சம் கோடி, கொரோனா தொற்று உள்ளிட்ட நெருக்கடி இருந்தாலும் தனது மதிநுட்பத்தால் முதல்வர் ஸ்டாலின் சரிசெய்து உள்ளார். ஊரக வளர்ச்சி துறை கிராமப்புறங்களில் வாழக்கூடிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பாடுபட்டு வருகிறது. கிராமப்புற வளர்ச்சிக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக குடிசை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குடிசைமாற்று வாரிய திட்டத்தை கொண்டு வந்தார் என்றார்