
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.
கொரோனா குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு திட்டமிட்டபடி, கடந்த 5 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த, 7,534 பள்ளிகளைச் சேர்ந்த, 8.85 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு கணிதம், கணினி அறிவியல், பொருளியல் பிரிவு மாணவர்களுக்கு, முக்கிய பாடத் தேர்வுகள் முடிந்து விட்டதை தொடர்ந்து அறிவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன.
உயிரியல், அறிவியல், வணிக கணிதம், தொழிற்கல்வி பிரிவு பாடங்களுக்கு, இன்று இறுதி தேர்வுகள் நடக்கின்றன. இதனுடன் அனைத்து தேர்வுகளும் முடிகின்றன. இதையடுத்து, கூடுதல் பாடமாக தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மட்டும், 28 ஆம் தேதி தொழிற்கல்வி பாடத் தேர்வு நடக்கிறது. இதை தொடர்ந்து, ஜூன் 1 முதல் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் துவங்க உள்ளன. ஜூன் 23ல் தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.