தமிழகத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பேரில், தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கஞ்சா, குட்கா போன்ற பொருட்களை கடத்தும் மற்றும் விற்பனை செய்யும் நபர்கள் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சென்னையைப் பொருத்தவரையில் போதைப்பொருளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை DAD என்ற திட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை சென்னை போலீசார் எடுத்து வருகின்றனர்.
அதனடிப்படையில் சமீபகாலமாக கஞ்சா, போதை மாத்திரை, ஆக்சிஸ் ஆயில் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பலை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் சிறப்பு தனிப்படை போலீசார் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சென்னை முகப்பேர் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் முகப்பேரைச் சேர்ந்த திலீப்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அதில்,அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து திலீப்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் கஞ்சா வியாபாரத்திற்கு ரயில்வே காவல் துறையில் துணை கண்காணிப்பாளராக இருக்கும் ஒருவரின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக்திவேல் என்ற காவலரும், தமிழகத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள காவல் அதிகாரியின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் செல்வகுமார் என்ற காவலரும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.