
குஜராத், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் துணை வேந்தரை அரசின் இசைவுடன் வேந்தரால் நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதே போன்று 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
இதன்படி வேந்தர் என்பதற்கு பதிலாக அரசு என்று சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை வேந்தராக நியமிக்கப்பட்டவர் தனது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தினாலோ, பல்கலைக்கழகத்தின் நலனுக்கு ஊறுவிளைப்பதாக அரசு கருதினால் மூன்று உறுப்பினர்களை நியமித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட திருத்தம் மூலம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்படுள்ளதால், முதலமைச்சர் தான் அரசு என்பதால் முதலமைச்சர் துணை வேந்தரை நியமனம் செய்வார். இந்த சட்ட மசோதா ஆய்வுக்கு எடுத்துகொள்ளப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்றார்.