தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த ஒரு ஆண்டாகவே நிரம்பிய நிலையிலேயே உள்ளது. அணையில் போதுமான நீர்இருப்பு உள்ளதால் இந்த ஆண்டு முதல்போக பாசனத்திற்காக வரும் ஜூன் 2 ஆம் தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் நீரை நிரப்பி வைக்கும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று காலை 7 மணிக்கு வைகை அணையில் இருந்து 7 பிரதான மதகுகள் மூலம் ஆற்றுப்படுகை வழியாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன் தலைமையிலான அதிகாரிகள் தண்ணீரை திறந்து வைத்து, பூக்கள் தூவினர். இன்று முதல் வரும் 9 ஆம் தேதி வரையில் இரண்டு கட்டமாக மொத்தமாக 849 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இந்த தண்ணீரின் மூலம் சிவகங்கை மாவட்டம், வைகை பூர்வீக பாசன பகுதி 1,2 மற்றும் 3ல் உள்ள மொத்தம் 118 கண்மாய்களில் நீரை தேக்கி வைக்க முடியும். இதன்மூலம் அந்த கண்மாய்களை சுற்றியுள்ள சுமார் 47,929 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், இதுதவிர வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளில் தண்ணீர் பெருக்கும் வகையில் நிலத்தடிநீரும் உயரும் என்றும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.