உயரும் கடல் நீர் மட்டம் எப்படி கணக்கிடப்படுகிறது?

உயரும் கடல் நீர் மட்டம் எப்படி கணக்கிடப்படுகிறது?

கடல் நீர் மட்டம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதால் நாமாக சராசரி கடல் மட்டம் என ஒன்றை நிர்ணயித்து அதைப் பயன்படுத்துகிறோம். ஒரு ஊர் எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பது சராசரி கடல் மட்டத்திலிருந்து அவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதை குறிக்கிறது.

ரயில் நிலைய நடைபாதையின் கோடியில் உள்ள பெயர்ப் பலகையின் அடிப்புறத்தில் உதாரணமாக above 245 MSL என்று எழுதப்பட்டிருந்தால் உங்கள் ஊரானது சராசரி கடல் மட்டத்திலிருந்து 245 மீட்டர் உயரத்தில் உள்ளது என்பதை அது காட்டும். MSL என்பது சராசரி கடல் மட்டம் (Mean Sea Level) என்பதைக் குறிப்பதாகும்..

சராசரி கடல் மட்டம் என்று கூறுவதற்குக் காரணம் உள்ளது. நீச்சல் குளத்தில் அல்லது ஓர் ஏரியில் நீர் மட்டம் சலனமற்று இருக்கலாம். மாறாக, கடல்களில் எப்போதும் அலைகள் உண்டு. சில சமயங்களில் பெரிய அலைகளும் இருக்கும். இதற்கு காரணம் பூமி மீது சந்திரன் செலுத்தும் ஈர்ப்பு சக்தி. காற்றும் ஒரு காரணமே.

கடல்களில் ஏற்றம் இறக்கம் என உண்டு. அதாவது ஒரு சமயம் கடல் நீரானது துறைமுகத்துக்குள் வெள்ளம் போலப் பாயும். அது ஏற்றம். இன்னொரு சமயம் வெள்ளம் போன்று துறைமுகத்திலிருந்து கடல் நீர் வெளியேறும். இது இறக்கம். இப்படியாகக் கடல் நீரின் மட்டம் மாறிக் கொண்டே இருக்கிறது.

இது போதாதென சூரியனிடமிருந்து கடல்கள் பெறும் வெப்பம் காரணமாக நீர் விரிவடைந்து கடல்களில் சில இடங்களில் கடல் நீர் வேறு பகுதிக்கு நதிபோல ஓடும். இதைக் கடல் நீரோட்டம் என்று கூறுவார்கள். கடல் நீரோட்டம் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் செல்வதாக இருக்கலாம்.

பூமியின் சராசரி வெப்பம் அதிகரித்து வருவதால் வட, தென் துருவப் பகுதிகளில் பனிப் பாளங்கள் மெல்ல உருகி வருவதால் கடலின் நீர் மட்டம் ஆண்டுக்குச் சராசரியாக 3.2 மில்லி மீட்டர் வீதம் உயர்ந்து வருகிறது. இவையெல்லாம் கடல் மட்டம் என்பது நிலையான ஒன்று அல்ல என்பதைக் காட்டுகிறன. இத்தனை அம்சங்களையும் கணக்கில் கொண்டுதான் சராசரி கடல் மட்டம் கணக்கிடப்பட்டு, அது பயனில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com