
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட தொடர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனினும் தமிழக தொடர் அரசின் எதிர்ப்பால், அணைக்கட்டும் திட்டத்தை தள்ளி வைத்து வந்த கர்நாடக அரசு, தற்போது காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மேகதாதுவில் அணைக்கட்ட மத்திய அரசை கர்நாடக அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது. இந்த நிலையில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக்கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானம் தாக்கல் செய்து, தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை காவிரிநீர் மேலாண்மை ஆணையம் பரிசீலிக்கவோ, அனுமதி தரவோ கூடாது என தெரிவிக்கப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றியப்பின் பேசிய அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரை தடுத்து அணை கட்டுவேன் என்று கர்நாடக அரசு கூறுவது மிகவும் கண்டனத்துக்குரியது என்றார். மேலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்கவில்லை என்றும், மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருவதாகவும் விமர்சித்தார்.