முல்லை பெரியாறு அணை விவகாரம்: வழக்கு 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கண்காணிப்பு குழுவின் அதிகாரத்தை அதிகரிப்பது தொடர்பாக தமிழ்நாடு-கேரளா இடையே பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை என்பதால் வழக்கு 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முல்லை பெரியாறு அணை விவகாரம்: வழக்கு 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கை கடந்த 24ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு மேற்பார்வை குழுவில் இரு மாநில தொழில் நுட்ப உறுப்பினர்களை சேர்த்து குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கினால் என்ன? என்ற ஆலோசனையை முன்வைத்தார். இது தொடர்பாக இரு மாநில வழக்கறிஞர்களும் ஆலோசனை நடத்தி ஆலோசனை விவரங்களை இன்றைய தினம் (29ம் தேதி) தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு ஏட்டப்படவில்லை; இருப்பினும் கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி அணையை மேலும் பலப்படுத்த உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுகளை செயல்படுத்தி மேற்பார்வை குழுவுக்கு கேரள அரசு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை அகற்றுவதற்கும் வண்டிப்பெரியாறு-வள்ளக்கடவு சாலை அமைப்பதற்கும் கேரளா அரசு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இவற்றை செயல்படுத்த கேரள வனத்துறை மற்றும் காவல்துறை தடையாக இருக்க கூடாது என்பது உள்ளிட்ட ஐந்து அம்சங்களை தமிழ்நாடு அரசு தரப்பில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அணையின் மாதாந்திர நீர்மட்டத்தை முடிவு செய்வது மற்றும் மதகுகளின் கட்டுப்பாடு ஆகியவற்றை மேற்பார்வை குழுவிடம் வழங்க வேண்டும் என்று கேரள அரசு தரப்பில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது; இதனை ஏற்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்ட நிலையில் இவ்விவகாரத்தில் இன்னும் பேச்சுவார்த்தை முடிவடையவில்லை என்பதால் வழக்கை வேறு ஒரு தினத்தில் விசாரிக்க வேண்டும் எனவும் இரண்டு நாட்கள் வழக்கை ஒத்தி வைக்க கோரி இருமாநில வழக்கறிஞர்களும் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு முன்பு முறையிட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை வரும் 31ம் தேதி ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com