தேசிய கட்சியாக உருவெடுக்கிறதா ஆம் ஆத்மி?!

தேசிய கட்சியாக உருவெடுக்கிறதா ஆம் ஆத்மி?!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி கட்சி பெருவாரியான இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் பிரதமராக பதவியேற்பார் என அக்கட்சியின் எம்.எல்.ஏவும் பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளருமான ராகவ் சத்தா தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "ஆம் ஆத்மி கட்சி தேசிய சக்தியாக உருவெடுத்து இருக்கிறது. காங்கிரசுக்கு மாற்றாக ஆம் ஆத்மி திகழ்ந்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு இது ஒரு மகத்தான நாளாகும். இன்று நாங்கள் தேசிய கட்சியாக மாறி இருக்கிறோம்.

இனி நாங்கள் சாதாரண மாநில கட்சி அல்ல. கடவுள் எங்களையும் அர்விந்த் கெஜ்ரிவாலையும் ஆசீர்வதிக்க வேண்டும். ஒரு நாள் அர்விந்த் கெஜ்ரிவால் இந்திய நாட்டை ஆட்சி செய்வார். பாஜக இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. ஆனால், 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியோ அதைவிட குறைவான ஆண்டுகளில் 2 மாநிலங்களில் வெற்றிவாகை சூடியுள்ளது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் மக்களுக்கு எந்த வசதிகளையும் செய்து தராமல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த கட்சிகளை மக்கள் அதிகாரத்திலிருந்து தூக்கி எரிந்துள்ளனர். அவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்." என்றார்.

2017 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் கருத்துக்கணிப்புகளும் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்ததை சுட்டிக்காட்டிய சத்தா, "இந்த வெற்றியின் அர்த்தத்தை நன்கு அறிவோம். இதன் மதிப்பை தற்போது உணர்கிறோம்." என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com