தேசியப் பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை முன்கூட்டிய பங்கு நிறுவனங்களின் சர்வரிலிருந்து எடுக்க உதவியதாகக் கூறப்படும் 'கோ-லொக்கேஷன்' ஊழல் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சித்ரா ராமகிருஷ்ணாவை மார்ச் 6ம் தேதி டெல்லியில் கைது செய்தது சிபிஐ.
ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் செயல் அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில் ஆனந்த் ராமகிருஷ்ணனை சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். மும்பையில் உள்ள தேசிய பங்குச் சந்தையின் நிா்வாக இயக்குநராக கடந்த 2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பா் வரை இருந்தவா் சித்ரா ராமகிருஷ்ணா. அப்போது அவா், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவா்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது.
முக்கியமாக சித்ரா ராமகிருஷ்ணன், இமயமலையில் வசித்த சாமியாா் ஒருவரிடம், பல்வேறு ஆலோசனைகளைப் பெற்று பங்குச் சந்தையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், சாமியாரிடம் பங்குச்சந்தையின் ஏற்ற, இறக்கங்கள், முன்கூட்டிய கணிப்பு உள்ளிட்டவற்றைப் பகிா்ந்து கொண்டதாகவும் புகாா்கள் எழுந்தன.
அதோடு சித்ராவின் பதவிக் காலத்தில், அந்த சாமியாா்தான் தேசிய பங்குச் சந்தையின் தலைமை அதிகாரிபோல் செயல்பட்டதாகவும், சித்ரா ராமகிருஷ்ணா, அவரின் பொம்மையாக இருந்தாா் எனவும் செபி குற்றம் சாட்டியது.
பங்குச் சந்தையில் முன் அனுபவம் இல்லாத சென்னை நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தலைமை செயல் அதிகாரியாக சாமியாா் பரிந்துரையின் பேரிலேயே சித்ரா ராமகிருஷ்ணன் நியமித்தாா் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
தேடப்பட்டு வந்த சித்ரா ராமகிருஷ்ணா மார்ச் 6ம் இரவு டெல்லியில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது செபி வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், வழக்கில் நடந்த முறைகேடுகள், ஆவணங்கள் பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.