அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ், 63 வயது ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும்படி, மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த முனுசாமி என்ற 63 வயது அரசுப் பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், நீட் தேர்வில் 348 மதிப்பெண்கள் பெற்ற தனக்கு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் அவரது கோரிக்கையை மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு நிராகரித்தது.
இதை எதிர்த்து முனுசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதாசுமந்த், 1977ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி முடித்த மனுதாரர், மொத்தமாக 11 ஆண்டுகள் அரசுப் பள்ளியில் படித்திருக்கிறார் எனவும், அந்த காலகட்டத்தில் 12ம் வகுப்புக்கு இணையான படிப்பு இல்லை என்பதாலும் அவருக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்து விளக்கம் அளிக்கும்படி மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிட்டதோடு வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.