மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA Committee) முதல் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைப்பெற்று வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க, மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தமிழக முதல்வரைத் தலைவராகக் கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA Committee) கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் துணைத் தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் உறுப்பினர் செயலாளராகவும், உறுப்பினர்களாக மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களான டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஆ.ராசா, எம்.செல்வராஜ், பி.ஆர். நடராஜன், திருநாவுக்கரசர், திருமாவளவன், ரவீந்திரநாத்குமார், நவாஸ்கனி மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, நவநீதகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல், மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், எழிலன், நீலமேகம், பூமிநாதன், அசன் மௌலானா மற்றும் செங்கோட்டையன் ஆகியோரும், பல்வேறு அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், மாநில அளவிலான வங்கியாளர் குழுவின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைப்பெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பொறுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையை மதிப்பாய்வு செய்தல், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மாநில அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித வளங்களின் செயல்திறனை வரிசைப்படுத்தி மதிப்பாய்வு செய்தல், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நீக்கி விரைந்து திட்டங்களை செயல்படுத்துவது, அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வடிவமைப்புகளை மேம்படுத்த / நடுநிலைப்படுத்த உரிய திருத்தங்களைச் செய்ய பரிந்துரைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதி நிலைமையை மதிப்பாய்வு செய்தல், திட்டங்களைச் செயல்படுத்துவதில் பெறப்பட்ட புகார்கள் / முறைகேடுகள் குறித்த ஆய்வுகள், மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார திட்டம், தீன தயாள் உபாத்தியாய கிராம மின்வசதி திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக குடிநீர் திட்டம், தேசிய நில ஆவணங்கள் கணினி மயமாக்கல் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.