டெல்லி மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருப்பது தேச நலனுக்கு முக்கியமானது : சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு வாதம் !!

டெல்லி மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருப்பது  தேச நலனுக்கு முக்கியமானது  : சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு வாதம் !!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் அங்கு மத்திய குடிமைப்பணிகள் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

இதை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக டெல்லி அரசு தொடர்ந்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசின் தரப்பில் கூறப்பட்டதாவது:-

டெல்லி தேசிய தலைநகர் என்பதால், அரசு ஊழியர்களின் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பது அவசியம். டெல்லி தேசத்தின் முகம். உலகமே இந்தியாவை டெல்லி வழியாக பார்க்கிறது. டெல்லியின் சட்டங்களின் முக்கிய அம்சம் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்ததாக இருக்கக்கூடாது.

மத்திய அரசுக்கு டெல்லியின் நிர்வாகத்தின் மீது சிறப்பு அதிகாரங்கள் இருப்பதும், முக்கியமான பிரச்சினைகளில் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதும் அவசியம். மத்திய அரசுக்கும் டெல்லிக்கும் இடையே ஏதேனும் நேரடி மோதல்களைத் தடுக்கும் வகையில் டெல்லியை நிர்வகிப்பதற்கான சட்டங்கள் உள்ளன.

டெல்லியின் மீது மத்திய அரசு கட்டுப்பாட்டை வைத்திருப்பது தேச நலனுக்கு முக்கியமானது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

.

இதற்கு எதிர்த்தரப்பு வாதத்தில் டெல்லி அரசு தெரிவித்துள்ளதாவது:-

மத்திய அரசு டெல்லி சட்டமன்றத்தை அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டது. டெல்லி அரசு எடுக்கும் முடிவுகளை, மத்திய அரசு லெப்டிணண்ட் கவர்னர் மூலம் தடுத்து செயல்பட விடாமல் செய்கிறது. இவ்வாறு டெல்லி தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com