நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு (சி.என்.ஜி)-வின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இவை சாமானிய மக்களை மட்டுமின்றி வாடகை வாகனங்களை இயக்கும் தொழிலாளர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்காரணமாக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களும் வாடகை வாகனங்களுக்கான கட்டணங்கள் உயர்ந்துள்ளன. எரிபொருள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில் மிக பெரிய அளவில் நஷ்டத்தை சந்திப்பதாக ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் கவலை தெரிவித்தனர்.
இவை தவிர, ஓலா உபர் வாடகை வாகனங்களில் பயனாளிகள் ஏ.சி உபயோகித்தால் கூடுதலாக 100 ரூபாய் பெறுப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தலைநகர் டெல்லி, டெல்லி-உ.பி எல்லையான நொய்டா, குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் 100ல் 80% வாகனங்கள் சி.என்.ஜி மூலம் இயங்குபவை.
2 வாரங்களுக்கு முன்னர் 1 கிலோ சி.என்.ஜி விலை 59 ரூபாய் இருந்த நிலையில் இன்று டெல்லியில் ஒரு கிலோ சி.என்.ஜி விலை 73 ரூபாயாக உள்ளது. இதனால் கடந்த 30ம் தேதி வாடகை வாகனங்களுக்கு சி.என்.ஜி மானியம் வழங்க கோரி ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதி இருந்தனர்.
ஆனால் அதன் மீது அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில் இன்று மற்றும் நாளை டெல்லியில் அனைத்து ஆட்டோ,டாக்சி,கால் டாக்சி உள்ளிட்ட வாகனங்கள் முழுமையாக இயக்கப்படாது என வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக பேசிய தொழிலர்கள் சங்க தலைவர்கள், டெல்லியில் ஒரு கிலோ சி.என்.ஜி 71-73 ரூபாய் வரை உள்ளது, ஆனால் 2015ம் ஆண்டுக்கு பிறகு வாடகை வாகனங்கள் கட்டணங்கள் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நாங்கள் 2 நாள் முழு வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளோம்.
எங்களின் கோரிக்கை, வாடகை வாகங்களுக்கான கட்டண நிர்ணயம் மாற்றியமைக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு கிலோ சி.என்.ஜி-க்கும் அரசு 35 ரூபாய் மானியம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த 2 நாள் முழு வேலை நிறுத்தம் காரணமாக டெல்லியில் பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.