காஷ்மீரில் அமர்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் .எனினும், கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக யாத்திரை நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 30-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி நிறைவடைகிறது
யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. 13 வயதுக்கு மேற்பட்ட 75 வயதுக்கும் குறைவானர்கள் மட்டுமே யாத்திரையில் கலந்து கொள்ள முடியும்.
பக்தர்கள் வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து காஷ்மீர் நிர்வாகத்தினருடன் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலாளர் அபூர்வா சந்த் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், அபூர்வா சந்த் கூறுகையில், ‘‘அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்களின் வசதிகளுக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வானிலை, பாதுாப்பு ஏற்பாடுகள் போன்றவை சவாலான பணியாக இருந்தாலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு சூழல்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஹோட்டல்கள், படகு வீடுகள், லாட்ஜ்கள் முன்கூட்டியே பதிவாகி உள்ளன.
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு 6 லட்சம் முதல் 8 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பக்தர்களுக்கு தங்குமிடம், குடிநீர் வசதி,மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.