பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக இன்று முடிவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று முடிவெடுக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக இன்று முடிவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் அற்புதம்மாள் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பினார். இதனை பரிசீலித்த முதலமைச்சர் முக ஸ்டாலின், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த ஆண்டு மே 28-ஆம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பரோல் காலம் நீட்டிக்கப்பட்டு இறுதியாக கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி 9-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டு தற்போது பிணையில் வெளியில் உள்ளார்.

இந்தநிலையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வழக்கை மேற்கோள் காட்டி தனக்கு ஜாமீன் வழங்க கோரி பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பரோலில் இருக்கும் போது ஜாமீன் கோருவது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்ப, பரோலில் இருப்பதால் யாரையும் சந்திக்க முடியாத சூழல் இருப்பதாகவும் ஆகையால் ஜாமீன் வழங்க கோரியும் பேரறிவாளன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக இன்று பிற்பகலில் விசாரணை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com