நேர்த்தியான தனது உடை அலங்காரத்தை கணவர் பாராட்ட வேண்டும் மனைவி என்றும் எதிர்பார்ப்பார். எந்த உடைக்கு எந்தவிதமான அலங்காரத்தை தேர்வு செய்தால் அழகாக பொருந்தும் என்பதை கணவர் மனைவியிடம் சுட்டிக்காட்டலாம். முன்பை விட அழகாக இருந்தால் தயங்காமல் பாராட்டலாம்.
இதுபோன்ற பாராட்டு மனைவியை மகிழ்விக்கும். மனைவியும் கணவரின் உடை, அலங்காரம் போன்ற விஷயத்தில் மாற்றங்களை எதிர்பார்ப்பார். மனைவி சொல்லும் கருத்தை கணவர் ஆமோதிக்க வேண்டும். அதனை பின்பற்றி தனது தோற்றத்தில் மாற்றத்தை உணர்ந்தால் மனைவியை தயங்காமல் பாராட்டவும் வேண்டும்.
தன்னை சார்ந்திருப்பவர்களை பொறுப்புடன் கவனித்துகொள்வது பெரும்பாலான ஆண்களின் குணமாகும். மற்றவர்களுக்கு தக்க சமயத்தில் உதவுவது, ஆதரவாக இருப்பது போன்ற சமூக பொறுப்புள்ள பணிகளை விரும்பி செய்யும்போது தாராளமாக பாராட்ட வேண்டும். அதுவும் பெண்கள் பாராட்டினால் அதன் மதிப்பே தனித்துவமானது.
குறிப்பாக கணவர் மேற்கொள்ளும் சமூக சேவையை பாராட்டவேண்டிய பொறுப்பு மனைவிக்கு இருக்கிறது. மனைவி, கணவர் மனம் நோகும்படி நடந்து கொள்ளக்கூடாது. கணவரின் சுபாவத்தை நினைத்து பெருமிதம் கொள்ள வேண்டும். பாராட்டி கவுரவிக்க வேண்டும்.
குடும்ப விஷயங்களில் முக்கிய முடிவுகளை கணவர்-மனைவி இருவரும் சேர்ந்து எடுப்பதே சிறப்பானது. இக்கட்டான சூழலில் கணவர் எடுக்கும் முடிவுக்கு மனைவி ஆதரவாக இருக்க வேண்டும். அதனால் நன்மை ஏற்படும்போது கணவரை மனமுவந்து பாராட்ட வேண்டும். சிக்கலான விஷயங்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் சாமர்த்தியமாக தீர்வு காணும்போது கணவரின் பேச்சு திறமையை பாராட்டலாம்.
செய்யும் தொழில், வியாபாரம், வேலை இவைகளை கடந்து வேறு ஏதேனும் தனித்திறன்கள் கணவரிடம் இருந்தால் அதை நிச்சயம் பாராட்ட வேண்டும். அது மேலும் அவரை உற்சாகத்துடன் செயல்பட தூண்டும். விளையாட்டு, சங்கீதம், ஓவியம், கலை போன்ற தனித்திறன்களை பாராட்டுவதன் மூலம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி உற்சாகமாக பயணிப்பார்கள்.
குடும்ப உறுப்பினர்கள் மீது அன்பும், பாசமும் கொண்டிருப்பது ஆண்களின் இயல்பான சுபாவத்திலேயே கலந்திருக்கும். ஆனால் அதனை வெளிப்படுத்தமாட்டார்கள். சிலர் வெளிப்படுத்துவதற்கு தயங்குவார்கள். பொதுவாகவே ஆண்கள் குடும் பத்தை அனுசரித்து வாழும் வழக்கம் கொண்டவர்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.
எல்லோரையும் நல்லபடியாக பார்த்துகொள்வது தனது கடமை என்று கருதுவார்கள். அதற்காக சில சமயத்தில் கடுமையாக நடந்து கொள்ள நேரிடும். அந்த சமயத்தில் அதை உணர்ந்தும், ஏற்றுக்கொண்டும் வாழ பழகிக்கொள்ள வேண்டும். குடும்ப நலனுக்காக கணவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மனைவி பாராட்ட வேண்டும்.