கண் மருத்துவமனைக்கு வருபவர்களில் பலர் தங்களுக்குக் கண்ணில் அழுத்தம் இருக்குமா என்று கேட்கிறார்கள். அதாவது அவர்கள் கேட்பது கண்ணில் அழுத்தம் அதிகரித்திருக்குமோ என்கிற கவலையில்.
பொதுவாக நம் கண்ணில் ஒருவித அழுத்தம் பராமரிக்கப்பட்டு வருவது இயல்பான ஒன்றுதான். அழுத்தம் இயல்பாக இருக்கும்போது பிரச்சினை இல்லை. அழுத்தம் அதிகரிப்பதுதான் கவலைக்குரிய செய்தி. அதனால் தலைவலி என்றாலோ அல்லது கண்ணில் ஏதாவது பிரச்சினை என்றாலோ ஒருவேளை கண்ணில் பிரஷர் அதிகமாயிருக்குமோ என்று அதிகம் கவலைப்படுகிறார்கள்.
நம் கண்ணின் இயல்பான அழுத்தம் 10 - 20 மி.மீ பாதரச அழுத்தத்துக்குள் இருக்க வேண்டும். இதைவிட உயர்ந்தால் அதனை கண்நீர் அழுத்த உயர்வு (Glaucoma) என்கிறோம். நம் உடலில் பி.பி அதிகமாக உயரும்போது எப்படி பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறதோ அது போல் கண்நீர் அழுத்தம் உயரும்போதும் பிரச்சினைகள் ஏற்படும். நம் கண்ணில் உள்ள முன் கண்ரசம் உற்பத்தியாவதில் உள்ள பிரச்சினை அல்லது அதன் சுழற்சி பாதையில் ஏற்படும் தடை காரணமாக அழுத்தம் அதிகரிக்கலாம்.
இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் எந்தவித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் கண்களைப் பாதிப்பதால் பெரும்பாலும் பாதிப்பு ஏற்பட்ட பிறகே மருத்துவமனைக்குப் பலரும் செல்லும் நிலைமை இருக்கிறது.
பரபரப்பான வாழ்க்கைச் சூழல், வாழ்க்கை முறை மாற்றங்கள், தொழில் சார்ந்த அழுத்தங்கள் மற்றும் தொழில் முறைகள் போன்ற காரணங்களால் கண்நீர் அழுத்த உயர்வு கணிசமாக அதிகரித்து வருவதாக கண்மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
கண்நீர் அழுத்த உயர்வை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியாது. சொட்டு மருந்து மூலமாகவோ, லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலமாக அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இது ஒரு நாள்பட்ட நீடித்த பிரச்சினை என்பதால் வாழ்நாள் முழுவதற்கும் கவனிப்பும் தொடர் சிகிச்சையும் தேவை.
பார்வையைக் காப்பாற்ற கண்நீர் அழுத்த உயர்வினை தொடக்க நிலையிலேயே கண்டறிய வேண்டியது கட்டாயம். நாள்பட்ட நிலையில் பார்வை கடுமையாகப் பாதித்துவிடும். ஒருமுறை பார்வை நரம்பு பாதித்து பார்வை பாதித்துவிட்டால் இழந்த பார்வையை மீட்க முடியாது. கீழ்க்கண்டவர்களுக்கு இந்நோய் தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
• கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்கள் (Myopia - மைனஸ் கண்ணாடி அணிந்திருப்பவர்கள்
• வீட்டில் வேறு யாரேனுக்கும் கிளாக்கோமா பிரச்சினை இருப்பவர்கள்
• சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சினை, இரத்த அழுத்த உயர்வு இருப்பவர்கள்
• வேறு ஏதேனும் உடல்நல பிரச்சினைகளுக்கு ஸ்டீராய்டு வகை மருந்து எடுத்துக்கொள்பவர்கள்
• விளக்கினைச் சுற்றி ஒளிவட்டம் காண்போர்
• அடிக்கடி கண்ணாடியை மாற்றவேண்டி இருப்போர்.
• அடிக்கடி தலைவலி பிரச்சினை இருப்பவர்கள்
• பக்கப் பார்வையில் தடுமாற்றம் உடையவர்கள்
• அதிக மன அழுத்தம் உடையவர்கள்
பிற நோய்களைப் போல் இல்லாமல் கண்நீர் அழுத்த உயர்வு ஏற்பட்ட பிறகு அழுத்த உயர்வினால் ஏற்பட்ட பார்வை பாதிப்பினை சரி செய்ய இயலாது என்பது மிகவும் வருத்தமான செய்தி. அழுத்த உயர்வினால் கண்ணின் பார்வை நரம்புகள் நசிந்து போய் விடும். இதனை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது.
ஆறுதலான செய்தியே இல்லை என்றால் இருக்கிறது. அழுத்த உயர்வு ஏற்பட்ட பிறகு அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி மேற்கொண்டு பார்வை பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க நல்ல மருந்துகளும் லேசர் சிகிச்சை முறைகளும் இருப்பதுதான் அது.
முன்னரே குறிப்பிட்டது போல் கண்நீர் அழுத்த உயர்வு ஒரு நாள்பட்ட பிரச்சினை. தொடர் சிகிச்சையும் கவனிப்பும் தேவை. இதன் மூலம் உறுதியாகப் பார்வையை முழுவதுமாக காக்க முடியும்.