கணவன்-மனைவி உறவில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், அது மற்றவருக்கும் அழுத்தத்தை உண்டாக்கும். மனஅழுத்தம் உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தலாம். துணையின் மன அழுத்தத்தை நீங்கள் குறைப்பதற்கு நினைத்தாலும், அதற்கான சிறந்த அணுகுமுறை என்னவாக இருக்கும்
என்பதைப் பற்றிய புரிதல் உங்களிடம் இருக்காது. மேலும், அதைத் தவறாக அணுகினால், சச்சரவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
உங்கள் துணை மன அழுத்தத்தில் இருக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
துணை தனது பிரச்சினையைப் பற்றிகூறும்போதுகாது கொடுத்துகேளுங்கள்.மனஅழுத்தத்தில் இருக்கும்பொழுது, யாரேனும் அறிவுரை வழங்கினால் அதைகேட்கும் மனப்பக்குவம் இருக்காது.
எனவே அறிவுரை வழங்காமல், அவரின் உணர்வுகளை புரிந்து கொண்டால் போதும். பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பதைவிட, மன அழுத்தத்தினால் அவருக்கு ஏற்படும் உணர்வுகளை கட்டுப்படுத்த முயலுங்கள்.
அன்பையும், அக்கறையையும் வெளிப்படுத்த பல வழிகள் உள்ளது. சில நேரங்களில் உங்கள் துணை, தனக்கு மன அழுத்தம் தரும் விஷயங்களைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பாமல் இருக்கலாம்.
அது மாதிரியான தருணங்களில் அவருக்கு அழுத்தம் கொடுக்காமல், சிறிய செயல்களின் மூலம் உங்கள் அக்கறையை வெளிப்படுத்துங்கள்.
* உங்கள் துணையை நீங்கள் நன்றாக அறிந்தவர் என்றால், அவரின் பழக்கவழக்கங்களில் உள்ள மாற்றத்தை வைத்தே, அவர் மன அழுத்தத்தில் இருப்பதை கண்டறியலாம்.
உணவு அல்லது தூங்கும் பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள், அடிக்கடி தலைவலி அல்லது வயிற்று வலியால் சிரமப்படுதல், எதிலும் கவனம் செலுத்த இயலாமை அல்லது பணிகளை முடிக்க இயலாமை ஆகியவை மன அழுத்தம் இருக்கும்போது ஏற்படும் சில பிரச்சினைகள் ஆகும். எனவே அதற்கேற்றவாறு நீங்கள் நடந்து கொண்டால், மன அழுத்தத்தில் இருந்து அவரை எளிதாக மீட்கலாம்.
* ஆணும், பெண்ணும் மனஅழுத்தத்தைக் கையாளும் விதத்தில் வேறுபாடுகள் இருக்கும். ஹார்மோன்மாற்றங்கள் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்திற்கான மாற்றங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடும்.
பெண் ஆறுதலையும், அன்பையும், உணர்ச்சிப்பூர்வமான ஆதரவையும் பெற விரும்புவாள். ஆண் செயல்கள் மூலமும் அல்லது வெளியிடங்களுக்குச் சென்று மன அழுத்தத்தை போக்கவும் விரும்புவார்.
* இவற்றுடன் தங்களின் மன ஆரோக்கியமும் முக்கியம். உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி, நீங்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே, உங்கள் துணைக்கு உதவ முடியும்.