உள்ளாடை சுத்தம் அறிவோம்!

உள்ளாடை சுத்தம் அறிவோம்!

இடுப்பில் இருந்து சிறிதளவு மட்டுமே நீளும் அளவுக்கு இருக்கும் சாதாரணமான உள்ளாடைகளைத்தான் பலர் பயன்படுத்துகிறார்கள். இதற்குப் பதிலாக, பாக்ஸர் ஷார்ட்ஸ் பயன்படுத்துவது நல்லது. சாதாரணமான உள்ளாடையில், தொடைகள் மற்றும் உள்ளுறுப்புகளுக்கு இடையே போதிய காற்று வசதி இருக்காது. இதனால், இடுக்குகளில் வியர்வை படிந்து, தோல் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பாக்ஸர் ஷார்ட்ஸ் பயன்படுத்துவதால் இந்தப் பிரச்னை தவிர்க்கப்படும்.

பெரும்பாலானோர் குறிப்பாக, பெண்கள் இறுக்கமான மேல் உள்ளாடைகளை அணிகிறார்கள். இது தவறு. இறுக்கமான உடைகளை அணிவதால், தோல் சிவத்தல், தோல் எரிச்சல், உள்ளாடை அச்சுப்பதிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அவரவர் உடலுக்கு ஏற்ப, இறுக்கமற்ற உள்ளாடைகளை அணியலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது போல, அனைவரும் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்ற வேண்டும் என்பதைத்தான் மருத்துவர்கள் எப்போதும் அறிவுறுத்துகிறார்கள். அலுவலகம், பள்ளி, கல்லூரி போன்றவற்றுக்குச் செல்பவர்கள், மாலை வீட்டுக்கு வந்தவுடன் ஒரு சிறிய குளியல் போட்டுவிட்டு, உள்ளாடை படும் இடங்களை நன்றாகத் துடைத்த பிறகு, வேறு உள்ளாடை அணிய வேண்டும்.

இரவு, படுக்கைக்குச் செல்லும்போது, உள்ளாடைகள் அணிவதைத் தவிர்க்கலாம். இரவு, ஏழெட்டு மணி நேரமாவது நல்ல காற்றோட்டத்துடன் இருப்பது அவசியம்.

வெந்நீரோ, குளிர்ந்த நீரோ எதில் வேண்டுமானாலும் உள்ளாடைகளைத் துவைக்கலாம். உள்ளாடை அணியும் இடத்தில் தோல் பிரச்னை இருந்தால், உள்ளாடைகளைத் துவைப்பதற்கு எனப் பிரத்யேக சோப் பயன்படுத்த வேண்டும். உள்ளாடை அணியும் இடத்தில் ஏதேனும் அசெளகரியம், எரிச்சல், புண் போன்றவை இருந்தால் ஆன்டிஃபங்கல் லோஷன், ஆன்டிஃபங்கல் ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்தி உள்ளாடைகளைத் துவைக்கலாம். மற்ற உடைகளுடன் சேர்த்து உள்ளாடையை ஊறவைத்துத் துவைப்பதைத் தவிர்க்க வேண்டும். இரண்டையும் ஒரே நேரத்தில் துவைப்பதில் தவறு இல்லை. ஆனால், இரண்டுவிதத் துணிகளையும் வெவ்வேறு வாளியில் ஊறவைத்து, வெவ்வேறு சோப் பயன்படுத்தித் துவைக்க வேண்டும்.

உள்ளாடைகளைக் கட்டாயம் வெயிலில்தான் உலர்த்த வேண்டும். பல வீடுகளில் வீட்டுக்கு உள்ளேயே காயவைக்கிறார்கள். வெயிலில் உலரவைக்க முடியாத சூழலில், நிழலில் உலர்த்தி, அயர்ன்பாக்ஸ் கொண்டு மென்மையாக அயர்ன் செய்தால், கிருமிகள் நீங்கும். ‘நட்புக்கு இலக்கணம் ஜட்டி, பனியனை மாற்றிக்கொள்வது’ என்ற மிகத் தவறான கருத்து நமது சமூகத்தில் இருக்கிறது. எவ்வளவு நெருங்கிய நண்பராக, உறவாக இருந்தாலும், இன்னொருவர் உள்ளாடைகளை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். இதனால், இருவருக்குமே தோல் பாதிப்புகள் வர வாய்ப்பு உண்டு.

ஈரமான உள்ளாடையை எந்தக் காரணம் கொண்டும் அணியக் கூடாது. சில சமயங்களில் மழையில் நனைய நேரிட்டால், வீட்டுக்கு வந்த உடனேயே உள்ளாடையை மாற்றிவிட வேண்டும். குளிர்காலம் மற்றும் மழைக் காலங்களில் ஈரமான உள்ளாடையைப் பல மணி நேரங்கள் அணிவதால், ‘இன்டெர்ட்ரிகோ’ (Intertrigo) எனும் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது. குளிர் காலத்தைவிட கோடை காலத்தில் அதிக வியர்வை படிவதால் இன்டர்ட்ரிகோ பிரச்னை ஏற்பட வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு, மார்பகங்களுக்குக் கீழே, தோல் சிவப்பு நிறத்தில் மாறி, எரிச்சலோடு இருக்கும். அரிப்பு ஏற்படும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com