கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒன்றரை லட்சம் பேர் மார்பகப் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்படுகிறார்கள்.
இந்தியப் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் இந்த மார்பகப் புற்றுநோய்தான். போதிய விழிப்புணர்வு இல்லாததால் 60 சதவிகிதத்தினர் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவமனைக்கு வருகின்றனர்.
* மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் வீக்கம்
* மார்பக அமைப்பில் மாற்றம்
* மார்பகக் காம்பில் திரவம் கசிதல்
* மார்புக் காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளல்
* மார்பகத் தோலில் சுருக்கம் அல்லது புள்ளிகள் தோன்றுவது
* மார்பகம் சிவத்தல், வீங்குதல், கதகதப்படைதல்.
மரபணு அமைப்பில் ஏற்படும் சில பிறழ்வுகளால், சில செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளரும். இவை பெருகி கட்டியாக மாறுகிறது. சில வகைக் கட்டிகள் வளராமல் அப்படியே இருக்கும். இதனால் ஆபத்து இல்லை. ஒரு சிலருக்கு இது வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் இதை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டியும் வரலாம்.
சில கட்டிகள் வளர்ந்து பெரிதாவதோடு, பக்கத்தில் உள்ள பாகங்களுக்கும் பரவும். இதனையே புற்றுநோய் பரவுதல் என்கின்றனர். இது சுற்றியுள்ள திசுக்களையும் தாக்கும். இந்தத் திசுக்களை எடுத்து பயாப்சி செய்து பார்ப்பதன் மூலமே பரவும் கட்டியா அல்லது ஆபத்து இல்லாத வெறும் கட்டியா எனத் தெரிய வரும்.
இதில் ஸ்டேஜ் 0 என்றால் கட்டி வளர்ந்த இடத்திலேயே இருக்கிறது எனப் பொருள். ஸ்டேஜ் 4 என்றால், உடலின் பல பகுதிகளுக்கும் பரவி விட்டது எனப் பொருள். பாதிக்கப்படும் அனைவருக்குமே அது வெளியே தெரியும் கட்டியாகவும் இருப்பதில்லை.
உடலின் உள்ளே எந்த உறுப்பிலும் கட்டி உருவாகலாம். துவக்க நிலையில் கண்டுபிடித்தால் அதை குணப்படுத்த முடியும். நோயின் நிலை, கட்டி எவ்வளவு பெரிதாக இருக்கிறது. பரவக் கூடியதா, பரவாத நிலையா என்பதைப் பொறுத்து, அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை கதிரியக்க சிகிச்சை ஆகிய மூன்றும் தனித்தனியாகவோ சேர்த்தோ மேற்கொள்ளப்படுகிறது.