சமையல் எரிவாயு விரைவில் தீர்ந்து விடுகிறதா? : அதிக நாட்கள் வர சில வர வழிகள்

சமையல் எரிவாயு விரைவில் தீர்ந்து விடுகிறதா? : அதிக நாட்கள் வர சில வர வழிகள்

நான்கு பேர்களைகொண்ட ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 35 நாட்களுக்கு ஒரு கியாஸ் சிலிண்டர் போதுமானது. அதைவிட குறைந்த நாட்களில் கியாஸ் காலியாகிவிட்டால், அளவுக்கு அதிகமாக செலவாகிக்கொண்டிருப்பதாக அர்த்தம். கியாஸ் ஸ்டவ், சமையல் செய்யும் பாத்திரங்கள் போன்றவைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.

பாத்திரங்களின் அடியில் இருக்கும் கரியும், பர்னரில் இருக்கும் அழுக்கும் கியாஸ் செலவை அதிகரிக்கும். பர்னர், கியாஸ் பைப், ரெகுலேட்டர் போன்றவைகள் வழியாக மிகக்குறைந்த அளவில் கியாஸ் லீக் ஆக வாய்ப்பிருக்கிறது. அதனை பரிசோதனை செய்யுங்கள்.

ஸ்டவ்வில் தீ நீலநிறத்துடனோ, நிறமற்றதாகவோ எரியவேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் எரிந்தால், ஏதோ தடைகள் இருப்பதாக அர்த்தம். வாரத்தில் ஒரு நாள் பர்னரை சுத்தப்படுத்தவேண்டியது அவசியம். கொதிக்கும்போது ஸ்டவ்வில் உணவுப் பொருட்கள் விழுந்தால், சமையல் முடிந்ததும் அதை சுத்தம் செய்துவிடவேண்டும்.

எளிதாக சூடாகி, விரைவாக சமையலை முடிப்பதற்கு உதவும் பாத்திரங்களை கியாஸ் ஸ்டவ்வில் பயன்படுத்தவேண்டும். காப்பர் பிளேட்டிங் கொண்டவைகளும், அடிப்பாகம் அதிகம் விரியாதவைகளும் விரைவாக சமையலை முடிக்க வகைசெய்யும்.

காப்பர் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் வேகமாக சூடாகும். அதுபோல் சூடு அனைத்து பகுதிகளுக்கும் சீராக பரவவும் செய்யும். ஒருமுறை சூடாகிவிட்டால் அந்த சூடு அதிக நேரம் நிலைத்து நிற்கவும் செய்யும். அத்தகைய பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்துவது அவசியம்.

லைட்டரை கையில் எடுத்துவைத்துக்கொண்டு ஸ்டவ்வில் கியாசை திறந்தால்போதும். கியாசை திறந்துவைத்துக்கொண்டு லைட்டரையோ, தீப்பெட்டியையோ தேடிக்கொண்டிருந்தால் கியாஸ் வீணாகும்.

நாபை திறந்தாலே தீ எரியும் `செல்ப் இக்னிஷன் ஸ்டவ்'வை பயன்படுத்துவதும் நல்லது. சமையலுக்கு தேவையான அனைத்தையும் தயாராக்கி கைக்கு அருகில்வைத்துவிட்டு சமையலை தொடங்குங்கள்.

சமையலுக்கு சிறிய பர்னரை உபயோகித்தால், பெரிய பர்னரைவிட பத்து சதவீத கியாஸ் மிச்சமாகும். பர்னரின் அளவுக்கு தகுந்த பாத்திரங்களை சமையலுக்கு பயன் படுத்தவேண்டும். தீ, பாத்திரத்தின் அடிப்பகுதியில் முழுவதும் பரவி எரியவேண்டும்.

அடிப்பாகம் குறுகிய பாத்திரமாக இருந்தால், தீயின் அளவை குறைக்கவேண்டும். குறைக்காமல் `புள் பிளேம்' கொடுத்தால் ஓரங்களிலும் தீ எரிந்து, கியாஸ் வீணாகும். கொஞ்சமாக சமைக்கவேண்டும் என்றால் சிறிய பாத்திரம் போதுமானது.

பிரஷர் குக்கரின் பயன்பாடு எரிவாயு செலவைக் குறைக்கும். அதோடு சமையல் செய்யும் நேரத்தின் அளவையும் குறைத்துவிடும். சாதாரண பாத்திரத்தில் பயறு வேகுவதற்கு தேவையான கியாசைவிட, பிரஷர் குக்கரில் வேகவைத்தால் 46 சதவீத எரிவாயு மிச்சமாகும். பிரஷர் குக்கரில் செப்பரேட்டர் பயன்படுத்தி கூடுதலாக சில பொருட்களை வேகவைத்தால் பெருமளவு எரிபொருள் மிச்சமாகும்.

தானியங்கள், பயறு வகைகளை தண்ணீரில் ஊறவைத்த பின்பு வேகவையுங்கள். பிரிட்ஜ்ஜில் இருக்கும் பொருட்களை அவசரமாக வெளியே எடுத்து வேகவைக்கக் கூடாது. வெளியே எடுத்த பொருளின் குளிர்ச்சி நிலை மாறி, இயல்பான தட்பவெப்ப நிலைக்கு வந்த பின்பே வேகவைக்கவேண்டும்.

குளிர்ச்சி நிலையிலே சமைத்தால் அதிக அளவு எரிவாயு செலவாகும். சமைக்கும் பொருள் எந்த அளவுக்கு வேகவேண்டும் என்ற கணக்கு சமைப்ப வருக்கு தெரிந்திருக்கவேண்டும். தேவையில்லாமல் அதிக நேரம் பொருட்களை வேகவைத்தால் சமையல் எரிவாயு அதிகமாக செலவாகுவதோடு, உணவுப் பொருளின் சுவையும் குன்றிவிடும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com