இதயம் என்பது தசையால் ஆன ஓர் உறுப்பு. நமது உடலில் வேறெந்த தசையை விடவும் அதிகம் உழைப்பது இதயத் தசைகளே.
மனிதனின் இதயம் நிமிடத்துக்கு சராசரியாக 72 முறை துடிக்கும். ஒவ்வொரு நாளும் சுமார் 1 லட்சம் முறை துடிக்கும். மனிதனின் வாழ்நாளில் அதிகபட்சமாக 350 கோடி முறை இதயம் துடிக்கிறது.
இதயம் ஒரு மணி நேரத்தில் 378 லிட்டர் ரத்தத்தை ‘பம்ப்’ செய்கிறது. மணிக்கு 1.6 கி.மீ. வேகத்தில் ரத்தக் குழாய்களுக்கு ரத்தத்தை இதயம் அனுப்புகிறது. இதயத் துடிப்பை அறிய டாக்டர்கள் பயன்படுத்தும் ‘ஸ்டெதாஸ்கோப்’ கருவி 1816-ல் உருவாக்கப்பட்டது.
தாயின் வயிற்றில் 5 வாரக் கருவாக இருக்கும்போது தொடங்கும் இதயத் துடிப்பு, இறக்கும் வரை தொடர்கிறது. ஒரு நிமிடத்தில் ஆணை விடப் பெண்ணின் இதயம் சராசரியாக 8 முறை அதிகம் துடிக்கிறது.
தான் துடிப்பதற்கான மின்சாரத்தை தானே உற்பத்தி செய்துகொள்வதால், உடலில் இருந்து அகற்றப்பட்ட பின்னரும் குறிப்பிட்ட நேரம் வரை இதயம் துடித்துக்கொண்டிருக்கும்.
இதயத்தில் கை வைத்துப் பார்த்தால் ‘லப்டப்..லப்டப்’ எனத் துடிப்பதை உணர்கிறோம் அல்லவா? இதயத்தில் உள்ள 4 அறைகளின் வால்வுகள் திறந்து மூடும் ஒலிதான் அது.