பழைய சோற்றின் மருத்துவக் குணங்கள் குறித்து, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரைப்பை குடல் அறுவை துறை தலைவர் ஜஸ்வந்த் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்ட அந்த ஆராய்ச்சியில் ``மனித உடலில், குடலில் ஏற்படும் அலர்ஜி, புண்கள், அல்சர் காரணமாக குடல் புண்ணாகி, அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த நோயாளிகளை அறுவை சிகிச்சை செய்யாமலேயே பழையசோறு காப்பாற்றி வருகிறது” என்பது குறித்து அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முயலப்படுகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ. 2.77 கோடி நிதி உதவி பெறப்பட்டு ஆய்வு நடக்க உள்ளதாக அம்மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவர் மற்றும் துறை பேராசிரியர் ஜெஸ்வந்த் இதுகுறித்து பேசுகையில், “பெருங்குடல் அலர்ஜி, சிறுகு டல் வாய்ப்புண், குடல் புண் என 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
அவர்களின் உணவு பழக்க வழக்க மாற்றமே நோய்களுக்கான காரணமாக அமைந்தது தெரியவந்தன. குடல் புண், அலர்ஜி, வாய் புண்ணுடன் வந்த நோயாளிகளுக்கு, பழைய சோறு சாப்பிட வெவ்வேறு உணவுகள் பரிந்துரை செய்தோம்.
எங்கள் பரிந்துரைப்படி தொடர்ந்து பழைய சோறு சாப்பிட்டு வந்தவர்களுக்கு, நோய் பாதிப்பு வெகுவாகக் குறைந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக மருந்துகள் எடுத்தும், அறுவை சிகிச்சை செய்தும் சரிசெய்ய முடியாத குடல் நோய் பிரச்னைகள் கூட பழைய சோறு சாப்பிட துவங்கி யவுடன் சரியானது தெரிந்தது.
இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க, தமிழக அரசின் நிதியு தவியுடன் தற்போது ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
ஆராய்ச்சியில் பழைய சோற்றில் எவ்வளவு பாக்டீரியா உள்ளது என துல்லியமாக கண்டறியப்பட்டு வருகிறது. கிராமப்புறம், நகர்ப்புறம் என வெவ்வேறு இடங்களில் அவரவரின் வாழ்வியலை பொறுத்து இந்த பலன் யாவும் அமைகிறது.
எங்கள் ஆய்வில், பழைய சோறு தயாரிக்கும்போது, பாக்டீரியா அளவு எவ்வளவு இருக்கும் கணக்கிடப்படும். போலவே எந்த வகையான அரிசி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது கணக்கில் கொள்ளப்படும். அதன் விளைவுகளும் ஆய்வு செய்யப்படும்.
இப்படி நாங்கள் செய்த ஆய்வின் முடிவில் `பழைய சோற்றில் குடலை வலுப்படுத்தும் நல்ல பாக்டீரியா அதிக அளவில் உள்ளது; குறிப்பாக, இயற்கை முறையில் பயிரிடப்பட்ட கைக்குத்தல் அரிசி பழைய சாதம், சாதாரண அரிசி பழைய சாதத்தை விட பன்மடங்கு சிறந்தது.
பழைய சோறு சாப்பிட்டு வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு, சர்க்கரையின் அளவு கட்டுக்குள்ளேயே இருக்கும். பழைய மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால், அதிக பழைய சோறு எளிதில் ஜீரணமாகும் சத்துக்கள் நிறைந்தது. 80 சதவீத குடல் நோய்களுக்கு மருந்தாக பழைய சோறு உள்ளது’ போன்றவை தெரியவருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.