‘பொஹேமியன் பேஷன்’ என்பது இயற்கை இழைகளால் ஆன துணிகள் மற்றும், பழங்கால முறையிலான பாணியைக் கொண்டது. ‘பொஹேமியன் பேஷன்’ பிரான்சு நாட்டில் இருந்து உலகம் எங்கும் பிரபலமானது. இந்த முறையில் அணியும் ஆடைகளில் பலவிதங்கள் உள்ளன.
பாவாடை : பிளாட்ச் பிரிண்ட்டுடன் கூடிய பாப்ளின் சட்டையும், கெட்டியான ஏ-லைன் நீண்ட பாவாடையும் கொண்ட இந்த ஸ்டைலில் அணியும் ஆடைகள் ஏக்கம் நிறைந்த அழகை சித்தரிப்பதாக இருக்கும். இதற்குப் பெரிய அளவிலான நகைகள் எதுவும் அணிய வேண்டாம்.
கவுன் வகை : இதில் பருத்தி துணியில், இயற்கையான வண்ணங்களால் சாயம் ஏற்றப்பட்டுத் தயாரிக்கப்படும் கவுன் வகைகள் அடங்கும். இந்த கவுனில் சிறிய சிறிய வடிவங்கள், பூக்கள் இடம் பெற்றிருக்கும். கோடைக்காலத்திற்கு ஏற்ற ஆடை என்று இதைக் குறிப்பிடலாம். இதில் இடம்பெறும் டிசைன்களும் கைகளால்தான் வடிவமைக்கப்படுகிறது. அனார்கலி வகை ஆடைகளின் மேல்பக்கம் சற்று இறுக்கமாகவும், கீழ் பகுதியில் தளர்வாகவும் இருக்கும்.
சிக் ஆடை : இந்த ஆடையின் மேல்பகுதி, முறுக்கு போன்று க்ராப் செய்யப்பட்ட மேலாடையையும், போர்வை போன்ற தளர்வான நீண்ட பாவாடையையும் கொண்டிருக்கும். இயற்கை வண்ணங்களால் சாயமேற்றப்பட்ட துணியால் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டிருக்கும். இது ஆப்ரோ லேபிள் மரபுகளைச் சார்ந்து இருப்பதால், சர்வதேச அழகுடன் மிளிர்ந்திருக்கும்.
ஜம்ப் சூட்: இதில், பேகி பாட்டம் கொண்ட ஜம்ப் சூட், இகாட் துணியால் தைக்கப்பட்டிருக்கும். அணிவதற்கு மிகவும் எளிதான ஆடை. கோடையில் மலையேற்றம், டிரக்கிங் செல்ல விரும்பும் போது, இந்த வகையான ஆடையைத் தேர்வு செய்யலாம்.
ஹால்டர்: கோடைக்கேற்ற ஆடைகளில் முக்கியமான ரகம். இதுவும் நீண்ட கவுன் வடிவத்தில்தான் இருக்கும். இளம்பெண்களை கவரும் ஆடைகளில் இதற்கு எப்போதும் தனி இடமுண்டு. இந்த வகை ஆடை கடினத்தன்மை இல்லாமல், மென்மையாக இருக்கும் என்பதால், கோடைக்காலத்தில் எளிதாக அணிய முடியும்.