ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல்மொழி என்பது தனித்துவமானது. ஒருவருடைய உடல்மொழியே அவரின் மனநிலையை எளிதாக வெளிப்படுத்தும். அதனால் உடல்மொழி பழகுங்கள். உங்களை தனித்துவமாக காட்டிக்கொள்ளுங்கள்.
நீங்கள் எந்த அளவுக்கு நேர்மையானவர் என்பதை நேரடியாக கண்களைப் பார்த்து பேசுவதின் மூலம் சொல்லிவிட முடியும். அதனால் நேர்காணலில், கல்லூரி 'வைவா' உரையாடலில், அலுவலக சந்திப்பில் சம்பந்தப்பட்டவரின் கண்களை நேராக பார்த்தே பேசுங்கள்.
பேசிக்கொண்டிருக்கும் பொழுது உதட்டை குவிப்பது, தாடையை சொறிவது, மேலும் என்ன என்பது போல அவசரப்படுத்துவது போன்றவை உங்களுக்கு அந்த விஷயத்தில் ஆர்வமில்லை என்பதை காட்டி உங்கள் சக ஊழியரை, அலுவலக மேலதிகாரியை, கல்லூரி பேராசிரியரை சலிப்படையச் செய்யும். அதனால் இதுபோன்ற செயல்களை தவிர்த்து விடுங்கள்.
இடுப்பில் கை வைத்துக்கொண்டு நிற்பது உங்கள் பொறுமையின்மையையும், உங்களுக்கு அந்த உரையாடலில் உள்ள ஆர்வமின்மையையும் காட்டுவதாய் இருக்கும்.
நீங்கள் நின்று கொண்டிருக்கும் தோரணையும் உங்கள் உடல்மொழியை அழகாய் கடத்தும். நின்று கொண்டு பேசும்பொழுது பாதங்களின் திசையும் கூட நீங்கள் கிளம்ப தயாராக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.
நாம் எப்படி நம் கருத்தை எதிரில் இருப்பவர் காது கொடுத்து கவனிக்க வேண்டும் என நினைக்கிறோமோ, அது போலத்தான் பிறருக்கும் தோன்றும். பிறருடனான உரையாடலில் கண்களைப் பார்த்து பேசிப் பழகுங்கள். அதன் பிறகு உங்கள் மீதான நம்பிக்கை பிறருக்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்வதை உணர்வீர்கள்.
அலுவலகத்தில் போலியாக புன்னகை செய்வதை தவிருங்கள். எதேச்சையாக கடந்து செல்கையில் வேறொரு மனநிலையில் இருந்துகொண்டு பிறரை பார்த்து புன்னகை செய்யும் பொழுது அது இயல்பானதாக இருக்காது. மனம் விட்டு சிரித்து உங்கள் இருப்பை பூர்த்தி செய்யுங்கள்.