வேலை தேடுபவரா நீங்கள்? நேர்காணலில் வெற்றி பெற சில ஆலோசனைகள் !!

வேலை தேடுபவரா நீங்கள்? நேர்காணலில் வெற்றி பெற சில ஆலோசனைகள் !!

நேர்காணல் என்பது வேலைக்கான நுழைவுச்சீட்டு போன்றது. நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போகும் அந்த முக்கியமான நிகழ்வில், நாம் செய்யக் கூடாத மற்றும் கட்டாயம் செய்ய வேண்டிய சில நுணுக்கமான விஷயங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

ஒவ்வொரு நேர்காணலிலும் ‘நாங்கள் எதற்காக உங்களைத் தேர்வு செய்ய வேண்டும்?’ என்ற முக்கியமான கேள்வி இடம்பெறுவதுண்டு. அதற்கு, ‘நான் இந்நிறுவனத்திற்காக கடுமையாக உழைப்பேன்’, ‘இந்தப் பதவிக்கு வேண்டிய திறமைகள் அனைத்தும் என்னிடம் இருக்கின்றன’ என்கிற பதில்களை கூறுவோம். இந்தச் சூழலைக் கையாளும் எப்படி கையாள வேண்டும் என்பதை பார்ப்போம்.

‘வேலைக்குத் தேவையான தகுதிகளாக நீங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். என்னுடைய தகுதி மற்றும் திறமைகளாக நான் எனது சுயவிவரக் குறிப்பில் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளேன். இரண்டிற்கும் பல விஷயங்கள் பொதுவாக இருக்கின்றன. எனவே இந்த வேலையை என்னால் திறம்பட செய்துவிட முடியும் என நான் நம்புகிறேன்.

மேலும், பொதுவாக இல்லாத சில விஷயங்களையும் நான் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதன் மூலம் வருங்காலத்தில் அந்த வேலைக்கான உங்கள் எதிர்பார்ப்பை முழுவதுமாக நான் பூர்த்தி செய்வேன் என உறுதியளிக்கிறேன்” என்ற பதிலை பணிவுடன் கூறி, அந்தக் கேள்வியை சாமர்த்தியமாக அணுகலாம்.

நேர்காணல் நடத்துபவர் நம்மிடம் ஒரு கேள்வி கேட்டு, அந்த கேள்விக்கான பதில் நமக்குத் தெரியவில்லை என்றால், தன்னம்பிக்கையுடன், “மன்னிக்கவும். இந்த கேள்விக்கான பதில் எனக்குத் தெரியவில்லை. எனினும் அதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறேன். இது சம்பந்தமாகத் தேடிப் பார்த்து கற்றுக் கொள்கிறேன்” என நேர்மறையாகப் பதில் அளிக்க வேண்டும்.

நேர்காணலில், உங்களின் ஒவ்வொரு உடல்மொழியும் கவனிக்கப்படும். நீங்கள் பதில் கூறுவதைத் தாண்டி, ஒரு கேள்வி கேட்கப்படும்பொழுது உங்கள் உடல்மொழி எப்படி இருக்கிறது என்பதை வைத்து, உங்கள் தன்னம்பிக்கை கணிக்கப்படும். எனவே, கேள்வி கேட்பவரின் கண்களைப் பார்த்து, அவர்கள் பேசுவதைக் கேட்டு தலையசைத்து, அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் அவர்களைப் பொறுமையாகக் கவனிக்கிறீர்கள் என அவர்களை உணர வைக்க வேண்டும். அவர்கள் பேசி முடித்து, ஒரு நொடிக்குப் பின்னரே, நீங்கள் பதிலளிக்கத் தொடங்க வேண்டும். பதிலளிக்கும்போது, ‘உங்கள்’ நிறுவனம் என பேசாமல், ‘நம்’ நிறுவனம் என பொதுவாக பேச வேண்டும். இவற்றைப் பின்பற்றினால், வேலை நிச்சயம்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com