காபி பிரியரா நீங்கள்...? அதை உடனே மாற்ற மாற்று முறைகள் இதோ...

காபி பிரியரா நீங்கள்...? அதை உடனே மாற்ற மாற்று முறைகள் இதோ...

காபின் சில நன்மைகளை கொண்டிருந்தாலும் அதனை அதிகமாக நுகர்வது பாதிப்பை ஏற்படுத்தி விடும். தூக்க சுழற்சியை பாதிக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். செரிமான அமைப்பிலும் பிரச்சினையை ஏற்படுத்தலாம். டீ, காபியை அதிகம் பருகும் பழக்கத்தை கடைப்பிடிப்பவர்கள் சில ஆரோக்கியமான மாற்று வழிகளை பின்பற்றலாம்.

போதுமான அளவு உணவு உண்பது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். எனவே உணவை தவிர்க்காமல் சரியான நேரத்திற்கு உண்ணப் பழகுங்கள். மூன்று வேளை சாப்பிடும் உணவை ஐந்து, ஆறு முறை என பிரித்து உண்ணலாம். அல்லது உணவுக்கு இடையே ஆரோக்கியமான தின்பண்டங்களை உட்கொள்ளலாம். தாமரை விதைகள், பழங்கள், நட்ஸ் வகைகள், யோகர்ட் போன்றவற்றை சிற்றுண்டியாக உண்பது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்.

உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடலில் ஆற்றலின் அளவை அதிகரிக்கலாம். இருப்பினும் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளை தவிர்த்துவிட வேண்டும். விறுவிறுப்பான நடைப் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகா செய்தல் போன்றவற்றை செய்தால் போதும். உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.

சோர்வு என்பது உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். அந்த சமயத்தில் காபி, டீ பருகுவதற்கு மனம் விரும்பும். அப்படி சோர்வாக இருக்கும் சமயங்களில் காபின் பானங்களை பருகினால் அதிகமாக சிறுநீர் கழிக்க நேரிடும். இதனால் உடலில் இருந்து அதிக திரவ இழப்பு ஏற்படும். அதனை தவிர்க்க தினமும் குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

மதிய உணவை சாப்பிட்ட பிறகு உடலில் ஆற்றல் அளவு குறைவது இயல்பானது. அதனை ஈடு செய்வதற்கு டீ அல்லது காபி பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அதற்கு பதிலாக 15 முதல் 20 நிமிடங்கள் குட்டி தூக்கம் போடும் வழக்கத்தை பின்பற்றலாம். இந்த குறுகிய கால தூக்கம் சோர்வை நீக்கி மீண்டும் உற்சாகத்துடன் செயல்பட தூண்டும். நிதானமாகவும், அமைதியாகவும் செயல்படுவதற்கும் வித்திடும்.

தூக்கமின்மை காரணமாகத்தான் பலரும் சோர்வை எதிர்கொள்கிறார்கள். குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியமானது என்று பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும் வேலை, மன அழுத்தம் மற்றும் ஸ்மார்ட்போன் உபயோகம் போன்றவை ஆழ்ந்த தூக்கத்திற்கு தடையாக அமைந்திருக்கின்றன.

தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள் பவர்கள் மாலை வேளைக்கு பிறகு காபின் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் எளிதில் செரிமானம் ஆகாத உணவு வகைகளை இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். டீ, காபியை தவிர்க்க முடியாதவர்கள் கிரீன் டீ, பால் போன்ற மாற்று பொருட்களை உட்கொள்ளலாம். நன்றாக சாப்பிடுவதன் மூலமும், உடற்பயிற்சி செய்வதன் மூலமும், நன்றாக தூங்கு வதன் மூலமும் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com