உடல் பருமனான பெண்களுக்கு கரு உருவாவதில் இத்தனை சிக்கல்களா?

உடல் எடை கொண்ட பெண்ணை விட உடல் பருமன் கொண்ட பெண் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு. உடல் பருமன் ரூபத்தில் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேமிக்கப்படுவது நிலைமையை மோசமாக்கும்.
உடல் பருமனான பெண்களுக்கு கரு உருவாவதில் இத்தனை சிக்கல்களா?

2016-ம் ஆண்டு நிலவரப்படி, உலகில் 650 மில்லியன் பேர் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4-ந்தேதி உலக உடல் பருமன் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

உடல் பருமன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் பல்வேறு அம்சங்களை பாதிக்கும். பெண்ணின் இனப்பெருக்க ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உடல் பருமன் பொதுவாக உடல் நிறை குறியீட்டு எண் (பி.எம்.ஐ) படி அளவிடப்படுகிறது. இது ஒரு நபரின் எடைக்கும் (கிலோ கிராமில்), உயரத்திற்கும் (மீட்டர்) இடையே இருக்கும் விகிதமாகும். சாதாரண பி.எம்.ஐ 18.5 முதல் 24.9 வரையில் இருக்கும். இது கர்ப்பம் தரிக்க ஏற்றது. ஆய்வுகளின் படி, 29-க்கு மேல் பி.எம்.ஐ கொண்ட பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைவு. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் போது, கருத்தரிக்கும் வாய்ப்பு சாத்தியமில்லாமல் போய்விடும்.

உடல் பருமன் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். பருமனாக இருக்கும்போது, உடலில் அதிக கொழுப்பு சேர்வதால் இது நிகழும். மேலும் இந்த கொழுப்பு படிமம் ஈஸ்ட்ரோஜனை வெளியிடும். இது பெண் பாலின ஹார்மோன் ஆகும். உடல் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை வெளியிடும்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை கட்டுப்படுத்திவிடும்.

எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு இவை இரண்டும் மாதவிடாய் சுழற்சியில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை வழக்கமானதாக மாற்றிவிடக்கூடும்.

சாதாரண பி.எம்.ஐ உள்ள பெண்களை விட அதிக எடை கொண்ட பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு 29 சதவீதம் அதிகம்.

உடல் பருமன், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) இவை இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கும் தன்மை கொண்டது. மேலும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை, ஆண் பாலின ஹார்மோன்கள் அதிகம் சுரப்பது, முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சி, எடை அதிகரிப்பு மற்றும் கருவுறாமை போன்ற பிரச்சினைகளையும் உண்டாக்கும். கர்ப்பம் தரிக்க திட்டமிடுவதற்கு முன்பு உடல் எடையை சரி பார்க்க வேண்டும். ஏனெனில் கர்ப்பத்திற்கு ஆரோக்கியமான எடை முக்கியமானது. பி.எம்.ஐ.யை 1 முதல் 2 புள்ளிகள் வரை குறைப்பதுகூட கருத்தரித்தல் விஷயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதிக எடை அல்லது பருமனாக இருந்தால், கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன்பு எடையைக் குறைக்க வேண்டும். 10 முதல் 15 சதவீதம் எடை இழப்பு கூட கருவுறுதலை மேம்படுத்தலாம். இது மருந்து அல்லது சிகிச்சை இல்லாமல் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com