கர்ப்பப்பை எடுத்த பிறகு...

கர்ப்பப்பை எடுத்த பிறகு...

இனப்பெருக்க மண்டலத்தின் முக்கிய உறுப்பாக இருக்கும் கர்ப்பப்பை பெண்மைக்கே பெருமை சேர்க்கும் அடையாளம். ஆனால், பரபரப்பும், பதட்டமும் நிறைந்த இன்றைய வாழ்க்கைச் சூழலாலும், உணவுப் பழக்கத்தாலும், மாதவிடாய் நிற்கும் நிலையில் இருக்கும் சில பெண்களுக்குத் தொடர்ந்து அதிகப்படியான உதிரப்போக்கு, கர்ப்பப்பை இறக்கம், கர்ப்பப்பை வலுவிழத்தல் என வேதனைகளையும் சோதனைகளையும் சுமக்கும் ஓர் அங்கமாகவும் கர்ப்பப்பை மாறிவிடுகிறது. கர்ப்பப்பையில் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளை எளிதில் சரிசெய்துவிடக்கூடிய அளவுக்கு இன்றைய மருத்துவம் முன்னேறி இருந்தாலும், கர்ப்பப்பையையே அகற்றவேண்டிய சூழலும் சிலருக்கு ஏற்படத்தான் செய்கிறது.

''வெளிநாடுகளில் - குறிப்பாக ஐரோப்பாவில் - கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சையை மேற்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 2 லட்சமாக இருந்தது. ஆனால், தற்போது 20 ஆயிரமாகக் குறைந்துவிட்டது. எச்சரிக்கையாக இருந்தால் கர்ப்பபையை அகற்ற வேண்டிய நிலைமை நம் நாட்டுப் பெண்களுக்கும் ஏற்படாமல், கணிசமான அளவு குறைக்க முடியும்'' - நம்பிக்கையோடு சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயம் கண்ணன்.

''கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழல் ஒரு பெண்ணுக்கு எப்போது ஏற்படுகிறது?''

அதிகப்படியான உதிரப்போக்கு நீண்டகாலமாக இருக்கும்போது மருந்துகள் சாப்பிட்டும் பலன் கிடைக்காத நிலையில், இனிமேல் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் கர்ப்பப்பையை அகற்றலாம்.

கர்ப்பப்பையின் உட்சுவர் சவ்வுப் பகுதி கர்ப்பப்பையின் உள்ளுக்குள் வளராமல், வெளியே வளர்ந்து ஆங்காங்கே ரத்தக் கட்டு ஏற்படும். இதை எண்டோமெட்ரியோசிஸ் என்போம். இந்த நிலை வரும்போது அதிக வலி மற்றும் அதிக உதிரப்போக்கு ஏற்படும். மருந்துகள் பலன் அளிக்காது போனால், கர்ப்பப்பையை அகற்றவேண்டி இருக்கும்.

கர்ப்பப்பையில் வளரும் சதைக் கட்டிகளான ஃபைப்ராய்ட் மிகப்பெரிதாக இருக்கும் போதும், நோய் அறிகுறிகள் தென்பட்டாலும், கர்ப்பப்பை அகற்றப்படும்.

கர்ப்பப்பையில் புற்று நோய் இருப்பது பரிசோதனைகள் மூலம் 100 சதவிகிதம் உறுதி செய்யப்பட்டால் கர்ப்பப்பையை அகற்றவேண்டி இருக்கும்.

வயது கூடிய பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை இறக்கம் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாகவும் கர்ப்பப்பை அகற்றப்படலாம்.

பிரசவக் காலத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டு, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட்டால், கர்ப்பப்பையை அகற்றும் சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.

''கர்ப்பப்பையை எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?''

சிறுநீர், மலம் கழிப்பதில் பிரச்னை, குடல் இறக்கம், தொடர்ந்து அடிவயிற்றில் வலி போன்ற பிரச்னைகள் சிலருக்கு ஏற்படக்கூடும். பிற்காலத்தில் குடல் இறக்கம் ஏற்பட ஒரு சிலருக்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்குக் கர்ப்பப்பையை எடுக்கும்போது திசுக்கள் சேதமடைந்து வலுவிழந்துவிடலாம். இதனால் சிறுநீர், மலம் கழிப்பதில் சிரமம் இருக்கும்.

ஆனால் பொதுவாகப் பார்த்தால் கர்ப்பப்பையை எடுப்பதால் பெரிய பிரச்னைகள் எதுவும் வராது. அதனால், நிச்சயமாக பயப்படத் தேவை இல்லை.

''கர்ப்பப்பை எடுத்த பிறகு எந்த மாதிரியான முன் எச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்?''

நான்கு வாரங்கள் நல்ல ஓய்வு எடுக்கவேண்டும். அதுவும், முதல் நான்கு நாட்கள் முழுமையான ஓய்வு. 15 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்குள்ளேயே நடக்கலாம். 20 நாட்களுக்குப் பிறகு உடம்பை வருத்திக்கொள்ளாத அளவில் வீட்டு வேலைகளைச் செய்யலாம். ஒரு மாதத்துக்குப் பிறகு வெளியிடங்களுக்குச் சென்று வரலாம். ஆனால், வெளியில் செல்லும்போது நோய்த்தொற்று ஏற்படாமல் கவனமாக இருக்கவேண்டும். இரண்டு மாதங்கள் ஆனதும் மென்மையான தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்.

கர்ப்பப்பையை எடுத்துவிட்டால் அந்தப் பெண்ணுக்குத் தாம்பத்திய உறவில் ஆர்வம் இல்லாமல் போய்விடும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. இது முற்றிலும் தவறு. கர்ப்பப்பையை எடுப்பதற்கும் தாம்பத்திய உறவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. 40 வயதுக்குள் ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பையை எடுக்கவேண்டிய சூழல் நேரிட்டால், அதற்கு முன்பும், பின்பும் அந்தப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் உரிய ஆலோசனைகள் நிச்சயம் தேவை. இதனால், கணவன் - மனைவிக்குள் புரிதல் மற்றும் அக்கறை எற்படும்.

''உடல், பழைய நிலைக்கு வருவதற்கு என்ன மாதிரியான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்?''

குனிந்து நிமிர்ந்து செய்யக்கூடிய சின்னச் சின்ன வேலைகளைச் செய்யலாம். இதனால், அடிவயிறு மேல் நோக்கிப் போகும். வயிறு சுருங்கும். ஃபிசியோதெரபிஸ்ட் உதவியுடன் பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். பயிற்சிகளால் வயிற்றுத் தசைகள் வலுப்பெறும். வாயு நிறைந்த கிழங்கு வகைகளைத் தவிர்த்து காய்கறி, பழங்கள், கீரை வகைகள் எனச் சத்தான உணவுகளை அந்தந்த வயதுக்கு ஏற்ப சாப்பிட்டால் போதும். அதிக ஓய்வு எடுப்பது உடலை பருமனாக்கிவிடும்''

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com