செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக சட்டப் பேரவையில் இரண்டு முறை நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை 208 நாட்களுக்கு பிறகும் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பாத நிலையில் ஆளுநரை இன்று சந்தித்து அது குறித்து வலியுறுத்தப்பட்டது.
ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்ட மசோதாவை அனுப்பி வைக்க கால வரையறை எதுவுமில்லை என்று கூறினார். சட்டமன்ற மாண்பை கேள்விக்குறியாக்கும் வகையில் அவரின் நடவடிக்கைகள் உள்ளது. கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவார்கள்.
தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் சட்டமன்றத்தில் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தராதது வருத்தமளிக்கிறது.
ஆளுநர் எந்தவித ஒப்புதலையும் உத்தரவாதத்தையும் கொடுக்காத நிலையில் ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கும் தேனீர் விருந்தையும், சிலை திறப்பு நிகழ்ச்சியும் புறக்கணிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.