
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் திறனை மேம்படுத்த தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட NEAT 3.0 என்ற திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் திறனை மேம்படுத்தவும், தொழிற்கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும் பல்வேறு வழிகாட்டுதல்கள் தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் விதமாக, அதன் வழிகாட்டுதல்களை படிப்படியாக மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், NEAT 3.0 தொழில்நுட்பத்துக்கான தேசிய கல்வி கூட்டமைப்பு என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மத்திய அரசு, அதன் கீழ் இணைந்து செயலாற்ற வருமாறு தனியார் கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து மாணவர்களின் திறனை மேம்படுத்தவும், தொழிற்கல்வியை ஊக்குவிக்கவும் விருப்பம் உள்ள தனியார் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் நாளை முதல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி வரை www.aicte-india.org இணையதளத்தில் தங்கள் விருப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.