
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்கு அனைத்து விஷயங்களையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் ஆனால் கேரளா முழு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் வழக்கு விசாரணை நடைபெற்ற பொழுது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மத்திய அரசால் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு அணையின் செயல்பாடுகள் குறித்த பணிகளை மேற்பார்வை செய்து வருவதாகவும் அவ்வப்போது பரிந்துரைகளை வழங்குவதாகவும் ஆனால் அதனை கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகள் சரிவர பின்பற்றுவதில்லை என குற்றம் சாட்டினர்.
அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் சேகர் நாப்டே, அணையின் பாதுகாப்பை உறுதி மேலும் உறுதி செய்ய அனைத்து பணிகளையும் செய்வதற்கு தமிழகம் தயாராக இருப்பதாகவும் ஆனால் அதற்கு கேரளாவின் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் தமிழக அதிகாரிகள் செல்ல வேண்டியிருப்பதாகவும் அவ்வாறு செல்லும் பொழுது கேரளா ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார் அப்போது பேசிய நீதிபதிகள் தமிழக அரசின் இந்த குற்றச்சாட்டை பதிவு செய்து கொள்வதாகவும் இனி அவ்வாறு ஒரு இடையூறு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக எப்போது வேண்டுமானாலும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நாடலாம் எனவும் நீதிபதிகள் கூறினர்.